INDIAN ELEPHANT
காட்டுயிர் மனிதன் எதிர்கொள்ளல்
அல்லலுறும் காட்டுயிரை கண்டபோதெல்லாம் மனம் வாடினோம் என வள்ளலார்
அடியொற்றி நாம் கூற வேண்டிய நிலையில் இன்றைக்கு இருக்கின்றோம். கானகத்தில் இருந்த
மனிதன் ஓரிடத்தில் தங்கி, தாவர வகைகளில் இருந்து உணவை தயாரிக்கும்,பயிரிடும்
முறையை அறிந்து கொண்டது முதல், தன்
அறிவால் காட்டுயிர்களை பழக்கப்படுத்தவும்,கட்டுப்படுத்தவும் கற்றுக்கொண்டான்.
பயிரிடாப் பயிரை, இயற்கை விதிகளை உற்று நோக்கி கற்றுக்கொண்ட மனிதன், பயிரிட்டு
வெற்றி கண்டவுடன், மீதம் இருந்ததை விலங்குகளுக்கு விட்டு கொடுத்தான். கற்காலம்
கடந்த மனிதன், தன் உடமை, தனிஉடமை எனும் பேராசை தொடங்கிய போது, இயற்கை வழி வந்த தன்
உறவு விலங்குகளை எதிரியாகக் கொண்டு, விலக்கி வேளாண்முறையை மாற்றி அமைத்தபோது,
இயற்க்கை உயிர்களுக்கும், மனிதர்களுக்கும் நெறிமுறையற்ற தகராறை மனிதர்கள் தொடங்கி
வைத்தனர். மனித நாகரீகத்தில் தொடங்கிய காட்டுயிர் எதிர்கொள்ளல், இன்று உச்சத்தை
எட்டி நிற்கிறது. காலங்காலமாக நடந்து வரும் காட்டுயிர் மனித எதிர்கொள்ளலில், இன்று
காட்டுயிர்கள் சில அழிந்தும், பல அழிவின் விளிம்பிற்கும் தள்ளப்பட்டுள்ளது.
![]() |
INDIAN ELEPHANT |
நம் நாட்டில் நகரம்
மற்றும் கிராமம் வளர்ச்சியால் ஒருபுறம் காடுகள் அழிவதும், காடுகளில் உள்ள சோலைக்
காடுகள், புல்வெளிகள் அழிக்கப்பட்டதால் காடுகளின் அடர்த்தி சுருக்கப்பட்டதாலும்,
காடுகளில் தனியார் விடுதிகள், தோட்டங்கள், தொழிற்சாலைகள் பெருமளவு
ஏற்படுத்தபட்டதாலும், காடுகள் சுருங்கி, வனவிலங்குகளுக்கு உணவும், நீரும் பற்றாக்குறை
ஏற்பட்டு திக்கற்று அலைவதால் மனித எதிர்கொள்ளல் ஏற்படுகிறது. மலைப்பிரதேசங்களில்
தேயிலை தோட்டங்களும், சமவெளிகளில் தென்னை தோட்டங்களும் பச்சைப்பாலைவனமாக மாறிவிட்டப்
பிறகும், பயிர்களுக்கும்,களைக்கும், களைச் செடிகளுக்கும் இரசாயன மருந்துகளை
வீரியமாக தெளித்து அழித்த பிறகு, தாவரங்களை உணவாக உண்டு வாழும் விலங்குகள், உணவுக்கு
எங்கு செல்லும்? இது
தவிர அயல்தாவரங்களான கற்பூரம் மற்றும் சீகை ஆகியவை தொழிற்சாலைகளுக்காக காடுகளில் பெருமளவில் வளர்க்கப்பட்டதால், வளர்க்கப்பட்ட
நிலங்களில் கானகத்தன்மை மாறியதன் காரணமாக நிலத்தடி நீர் பெரும் அளவில் உறிஞ்சப்பட்டு நீர் ஊற்றுகளும்,சிற்றோடைகளும் அற்று போய் விட்டது. இம்மரங்கள்
வளர்ந்துள்ள பகுதிகளில் புல்,பூண்டு முளைப்பது தடைப்பட்டுள்ளதால் புற்களும், செடிகளும்
இல்லாத நிலத்தில், அயல் புதர் செடிகள் ஆக்கிரமித்துள்ளன. விவசாய நிலங்கள் மற்றும் தேயிலை
தோட்டங்களில் வன விலங்குகளுக்கு உணவாக இருந்த
களைகள், களைக்கொல்லி மருந்துகள் அடித்து
கட்டுப்படுத்தப்பட்டுவதால் வனவிலங்குகளுக்கு
உணவு பற்றாக்குறை ஏற்படுகிறது.
காட்டோர கிராம விவசாயத்தில் கரும்பும், வாழையும் பெரும் அளவில் பயிரிடப்படுகின்றன. காட்டில் உணவின்றி அல்லல்படும் யானைகள், எத்திசையில் வெளியேறினாலும் அங்கு தோட்டங்களால் கவரப்பட்டு, உணவுக்காகவும், நீருக்காகவும் நுழைகின்ற போது மனிதர்களால் கொடூரமாக தாக்கப் படுகின்றன. பட்டாசுகளால் விரட்டப்படும் யானைகள் தீப்புண்கள் ஏற்பட்டு ரண வேதனையில் மனிதர்களை கண்டாலே கோபம் கொள்ளும் அளவிற்கு, யானைகளின் உளவியலில் கொடூர வில்லனாக மனிதன் மாறி விட்டான். யானைகள் மட்டுமல்லாது தோட்டத்து பயிர்களை நாடி, மான், காட்டுப்பன்றி, சிறு தாவர உண்ணிகள் வருவதால், பல்லுயிர் சூழல் விலங்குகளில் வரிப்புலிக்கு அடுத்த வரிசையில் இருக்கும், அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் சிறுத்தையும் தன் இரை விலங்கை தேடித் தோட்டத்திற்கு வருகின்றன. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக்கிலும், புனேவிலும் ஏராளமான கரும்பு தோட்டங்கள் இருக்கின்றன. இந்த தோட்டங்கள் சிறுத்தைப்புலியின் வாழ்விடமாகவே மாறிவிட்டன. பல முறை சிறுத்தைப்புலி – மனித எதிர்கொள்ளல்(மோதல்கள்) ஏற்பட்டு அதில் பல சிறுத்தைகள் கொல்லப்பட்டன. தமிழகத்தில் வால்பாறை பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றாலும், சிறுத்தைகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டு, வேறொரு கானகப் பகுதியில் விடப்படுகின்றன. கூண்டு வைத்து பிடித்து வேறு இடத்தில் விடுவதும், கொல்லப்படுவதும் ஏறக்குறைய ஒன்றுதான் என்பதற்கு பல சான்றுகள் நம் நாட்டில் உண்டு.
"அக்ரி பிசினஸ்"
மாத இதழுக்கு எழுதிய கட்டுரை
ஏப்ரல் 2018.
No comments
Welcomes you to Nature for Future - A.M.AMSA