நமது கிராமப் புறங்களில் சுற்றி அலைந்து
பாருங்கள், காடுகளுக்குள் அனுமதி பெற்று நுழைந்து பாருங்கள், ஏரி, குளம்,
குட்டைகளில் பறவைகளை கண்டு இரசித்துப் பாருங்கள், எந்த உயிரினங்களையும்
தொல்லைப் படுத்தாமல் உற்று கவனித்துப் பாருங்கள், நமது மனநலம்
மேம்படுவதுடன், வாழ்க்கை, இரசனையுடன் அமையும். பணத்திற்கும்,
புகழுக்கும், அந்தஸ்துக்கும் அடிமையாகாமல் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ முடியும், சமூகம்
மேம்படும். ஆனால் நடைமுறையில் நாம் இயற்கையை விட்டு விலகியதோடு, இயற்கை சம
நிலை குலைவதற்கும், அழிவிற்கும் வித்திட்டு விட்டோம். பார்க்கும்
இடமெல்லாம் கான்கிரிட் கட்டடங்கள், காற்று மண்டலத்தை விஷமாக்கும் வண்டி, வாகனங்கள், தொழிற்கூடங்கள், மண்ணை மலடாக்கும் நெகிழி குப்பைகள், தண்ணீரை நாசமாக்கும் சாக்கடைகள் தேங்கி, கழிவுநீர் மறுசுழற்சி ஆகாமல் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதோடு மற்ற இயற்கை காரணிகள் அழிவதற்கும் நமது
வாழ்வியல் காரணமாக அமைந்து விட்டது.


மண்ணின் மரங்கள் அழிந்து
வருவதோடு, பூவரசு போன்ற மரங்கள் அழிவின் விளிம்பிற்கு போவதற்கும், மற்ற உயிரினங்கள் பேரழிவுக்கு உள்ளாகி வருவதையும் உணர்ந்து
இருக்கிறோமா? வயற்புறம், ஆறு, குளம், கடற்கரை, காடு, என அனைத்தும்
சீரழிந்து சின்னா பின்னாமாகிக் கொண்டிருப்பதை நாம் அறிவோமா? பல்லியில்
இருந்து பாம்பு வரை, யானையில் இருந்து பூனை வரை அனைத்து வகை
உயிரினங்களுக்கும் மனிதனே பெரிய எதிரியாக இருக்கின்றான்.
No comments
Welcomes you to Nature for Future - A.M.AMSA