பரிணாமத்தின் குரல்கள்



             உலகை புரட்டி போட்ட அரசியல் புரட்சிகள் போல, உயிரினங்களின் தோற்றம் என்ற சார்லஸ் டார்வினின் ஆய்வு சிந்தனை, அறிவியல் உலகை புரட்டி போட்டது. உலக மனித குலத்திற்கு புதிய வெளிச்சத்தையும், புதிய சிந்தனையும் உண்டாக்கியது. அதற்கு பிறகு ஏற்பட்ட அறிவியல் ஆய்வுகள், புதிய கண்டுபிடிப்புகள் மனித குலத்தை பலப் படிகள் முன்னேற்றியது. இயற்கைப் பற்றியும், காட்டுயிர் பற்றியும், பரிணாமத்தின் பாதை பற்றியும், உலக மக்களுக்கு தெரியாத, புதிரான பல விசயங்களுக்கு, எளிய முறையில் விளக்கமளிதவர்களில் முக்கியமானவர் டேவிட் அட்டன்பரோ. காட்டுயிர்களின் வாழ்விடங்களுக்கு சென்று அதன் பரிணாமம், வாழ்வியல், உணவு சங்கிலி, மற்ற உயிரினங்களுடன் பிணைப்பு, போராட்டம் போன்ற பல்வேறு இயற்கை நுட்ப உறவுகளை விளக்கமாக அட்டன்பரோ ஆவணப்படுத்தியது தனித்தன்மை வாய்ந்தது, அவர் இயக்கிய காட்டுயிர் படங்களில் The Planet Earth, Life of Birds, The Trials of Life, Life in Cold Blood  போன்ற தொகுப்புப் படங்கள் மிகப்பிரபலமானவை.

                          
            இப்புவியில் உள்ள அனைத்து வகையான உயிரினங்களையும் டேவிட் அட்டன்பரோ ஆவணப்படுத்தி இருப்பதை போன்ற பிரமிப்பை ஏற்படுத்துகின்றன அவருடைய காட்டுயிர் படங்கள். அவற்றை அறிவியல் தகவல் களஞ்சியம் என்றே கூறலாம். விலங்குகளின் அழிவிற்கு மனிதனே முக்கிய காரணம் என்றும், கிழக்காசிய நாடுகளில், குறிப்பாக இந்தியாவில் பல இனங்கள் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டு, அழிந்து கொண்டு இருகின்றன என்கிற டேவிட் அட்டன்பரோவின் ஆய்வு நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
            அமெரிக்காவில் பிறந்து, இந்தியாவில் குடியேறி, குடியுரிமை பெற்று ஊர்வன வற்றிற்கு குறிப்பாக இந்திய பாம்புகளுக்காக தன்னை அர்பணித்துக் கொண்டவர் ரோமுலஸ் விட்டேகர். இந்தியாவில் சுமார் 270 வகையான பாம்புகளும், அதில் 40 வகையான பாம்புகளுக்கு மரணத்தை விளைவிக்க கூடிய நஞ்சு உள்ள பாம்புகள் எனவும், அதிலும் வகையான பாம்புகளிடம் மட்டுமே மனிதர்கள் கடிபடுகிறார்கள். அந்த நான்கு வகையும் மருத்துவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இந்தியப் பாம்புகள் எனவும் அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்து பதிவு செய்தவர், இந்தியப் பாம்பு இயலின் அறிஞர் ரோமுலஸ் விட்டேகர். செங்கல்பட்டில் பாம்புக்குடி வனம் என்ற அவரது இல்லத்தில், நாங்கள் சந்தித்தப்போது, பாம்புகள் பற்றி அவரது களஆய்வு அனுபவங்களை கூறும்போது, ஒருவிசயம் எங்கள் சிந்தனையில் நன்றாக பதிந்தது, பாம்புகள் ஒரு முறை மனிதனை அவன் இருப்பிடத்தில் சந்தித்து உயிர் தப்பிவிட்டால், மறுமுறை அந்த இடத்திற்கு வருவதை தவிர்த்து விடும். இந்தியப் பாம்புகளை பாதுகாக்கும் விழிப்புணர்வு நம் நாட்டில் ஏற்பட்டதற்கு, ரோமுலஸ் விட்டேகரின் களப்பணி முக்கிய காரணம். குறிப்பாக தமிழ்நாட்டில் பாம்பு பிடித்து வாழும் இருளர்களின் இயற்கையான திறமையை, நஞ்சுமுறிவு மருந்திற்கும், மருத்துவதிற்க்கும் பயன்பாடு உள்ள மறுவாழ்விற்கு வித்திட்டவர் ரோமுலஸ் விட்டேகர். தமிழ்நாட்டில் பாம்புகளை பாதுக்காக்க வேண்டுமானால், பாம்புகள் பற்றிய அறிவியல் உண்மைகளை தமிழில் கற்பிக்கப்பட வேண்டும், சொல்லி தர வேண்டும் என தான் சந்திக்கும் இயற்கையாளர்களை வலியுறுத்தியவர். இவருடைய இந்தியப் பாம்புகள் நூல் தமிழாக்கம் செய்யப்பட்டு நேஷனல் புக் டிரஸ்ட் 1999 ஆம் ஆண்டு வெளியிட்டது. ரோமுலஸ் விட்டேகர், இந்திய முதலைகள், கடல் ஆமைகள் போன்றவையையும் பாதுகாக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டார், அதன் தொடர்ச்சியாக தெங்குமராடா மாயாறு, சென்னை போன்ற இடங்களில் முதலை பண்ணைகள் ஏற்படுத்தி களப்பணி ஆற்றியவர்.
               ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் அருகில் உள்ள ஈஸ்சென்டன் நகரை சேர்ந்த ஸ்டீவ் எர்வின், சாகசம் மூலம் மக்களை கவர்ந்து, காட்டுயிர் திரைப்படங்கள் வழியாக உலக மக்களை பரவசமூட்டினார். காட்டுயிர் பாதுகாப்புக்காக, காட்டுயிர்கள் அருகில் சென்று சாகசம் என்ற உத்தியை கையாண்டு உலக மக்களை கவர்ந்தவர். எர்வின் எளிய குடும்பத்தில் பிறந்தவர். ஆகவே எளிய மக்கள் ஆதரவு இல்லாமல் காட்டுயிர்களை காப்பாற்ற முடியாது என நம்பினார், ஆஸ்திரேலியா அடித்தள மக்கள் மொழியிலே காட்டுயிர் விவரங்களை தொகுத்து வழங்கினார். எர்வினின் சாகச நிகழ்ச்சிகள் தொலைகாட்சிகள் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் மூலம் கிடைத்த தொகைகளை Wildlife Warrior’s Worldwide  என்ற அறக்கட்டளை தொடங்கி காட்டுயிர் பாதுகாப்பிற்கும், ஆய்வுக்கும் ஏற்ற அமைப்பாகினார்.  ஸ்டீவ் எர்வின் கண்டுபிடித்த கடலாமைக்கு ‘Elseya Irwini’என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா பவளத்தீவுக்கு அருகில்Oceans Deadliest என்ற ஆவணப்படம் தயாரிக்க கடலுக்குள் திருக்கை மீனுக்கு அருகில் இருந்து படம் பிடிக்கும் போது, திருக்கை மீன் பயத்தில் வாலை சுழற்ற, அது தவறுதலாக எர்வினின் நெஞ்சில் குத்தி, இதயத்தை கிழித்தது, நெஞ்சில் இருந்த வாலை கையால் உருவி எடுத்த எர்வின், உடனே இறந்து போனார். காட்டுயிர் பாதுகாப்பிற்க்கு, தன் பயணத்தை சாகசத்தில் தொடங்கி, சாகசத்தில் முடித்து கொண்டார்.
                ரோமுலஸ் விட்டேகர் மற்றும் ஸ்டீவ் எர்வின் இருவரும் குறிப்பிட்ட வகையான உயிரினங்களுக்காக தங்களை அர்ப்பணித்து கொண்டவர்கள். டேவிட் அட்டன்பரோ இப்புவி முழுவதும் உள்ள காட்டுயிர்களின் பாதுகாப்பிற்க்காக தன்னை அர்பணித்தவர். என்றாலும் அறிவியல் அடிப்படையில் காட்டுயிர் பாதுகாப்பை இம்மூன்று ஆளுமைகளும் வலியுறுத்துபவர்கள். எனவே இவர்களை இயற்கை ஆய்வாளர்கள், இயற்கை அறிஞர்கள் என போற்றப்படுவது சரியானதே, ஸ்டீவ் எர்வின் நம்மிடையே இல்லையென்றாலும், “எளிய மக்கள் மூலம் காட்டுயிரை பாதுகாக்க முடியும்” என்ற அவர் தந்த நம்பிக்கை நம்மிடம் இருக்கிறது.
            புகழ் பெற்ற காட்டுயிர் ஆளுமைகளின் நேர்காணலை தமிழில் மொழிபெயர்த்திருக்கும், நண்பர் அருண் நெடுஞ்செழியன், வளர்ந்து வரும் இளம் இயற்கையாளர் மற்றும் சுற்றுசூழல் கள ஆர்வலர். உலகில் உள்ள சிக்கலான, ஆழமான கருத்துக்களை, அருண் நெடுஞ்செழியன் உள்வாங்கும் திறமை தனித்தன்மையானது. இதுபோன்ற உலக இயற்கை அறிஞர்களின் சிந்தனைகளை எளிய தமிழில் மொழிப்பெயர்த்து தந்தால், எதிர்காலத்தில் இயற்கையுடன் இயைந்த தமிழ் உலகம் நன்றி கூறும். 

பரிணாமத்தின் குரல்கள்- 
நூலுக்கான அணிந்துரை 
ஆசிரியர் : அருண் நெடுஞ்செழியன்
மார்ச் 2018

No comments

Welcomes you to Nature for Future - A.M.AMSA

Powered by Blogger.