புல்விரியன் பாம்பு (Bamboo Pit Viper)

                     சத்தியமங்கலம் வன விலங்கு சரணாலயம், தமிழகத்தின் நான்காவது புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட பிறகு, நாங்கள் செல்லும் முதல் பயணம் இது,  இரவும்,பகலும் பெரும் இரைசலுடன், கனரக வாகனங்கள் செல்லும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர ஊரான ஆசனூரில் ஓரிரவு தங்கி கானுலா செல்ல, ஈரோடு இயற்கை நண்பர் ஏற்பாடு செய்திருந்தார். சென்னையில் பணிபுரியும் நண்பர் பாலாஇன்டர்சிட்டி எக்ஸ்பிரஸில் மதியம் ஈரோடு வந்து சேர, அவரையும் அழைத்து கொண்டு மாருதி வேகன்ஆர் காரில் சத்தியமங்கலம் வந்து சேர்ந்தனர். மாலை 4 மணிக்கு சத்தியமங்கலத்தில் இருந்து பயணத்தை தொடங்கினோம். மாலை நேரம் மேக மூட்டத்துடன் மழை வருவதைப் போல வானம் கருக்கலாக இருந்தது. ஒரு மணி நேரத்தில் திம்பம் வந்து சேர்ந்தோம்.
                          திம்பம் தேநீர் கடையில் எங்கள் கார் நின்றவுடன், தேநீர் அருந்துவதற்காக  நாங்கள் காரை விட்டு இறங்கியவுடன், குளிர்ந்த காற்று எங்கள் உடலை வருடியது. தேன்சிட்டு பறவையின் இறகு ஒன்று, காற்றில் மிதந்து வந்து,  கைகளில் மோதி விட்டு தரையில் விழுந்தது. இறகு கைகளில் பட்டவுடன் ஏற்பட்ட சிலிர்ப்பு,  மனதிற்கு இன்பமான மகிழ்ச்சியை உண்டாக்கியது. கானக பகுதிகளுக்கு செல்லும் போது, உடலும், மனமும் புத்துணர்ச்சி அடைந்து, நம் மேல் படும் குளிர்ந்த காற்றும், பல்வேறு காட்டுப் பூக்களின் வாசனையும், இயற்கையான பொருள்களின் மோதலும், உரசலும், நம்மை உற்சாகப்படுத்தி, உடலை, உடல் உறுப்புகளை புத்துணர்ச்சி பெற செய்கின்றன. இது இயற்கைக்கும் நமக்கும் உள்ள பிணைப்பு. இந்த பிணைப்பு எதிர்காலத்தில், நமக்கும் நம் எதிர்கால தலைமுறைக்கும் கிடைக்குமா? என்ற ஏக்கத்தில் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.
                  ஆசனூர் ஆற்றங்கரையோர விடுதி ஒன்று ஏற்பாடு செய்யபட்டிருந்தது. விடுதி ஓரப் பள்ளத்தில் காட்டு மரங்கள் ஆங்காங்கே தென்பட்டது. காட்டு அத்திமரமும், காட்டு நாவல்மரமும் செழித்து வளர்ந்து இருந்தன. காரில் இருந்து நாங்கள் இறங்கும் போது, விடுதி பொறுப்பாளர் இரவு உணவிற்கான தேவைகளை அறிந்து, சரியாக இரவு 8 மணிக்கு கொண்டு வருவதாக கூறி விட்டு சென்று விட்டார். விடுதியின் ஓரத்தில் சுற்று சுவருக்கு அருகில் சென்றால், ஆற்றில் இருக்கும் காட்டு மரங்களிலிருந்து புள்ளினங்களின் ஓசை, இசை போல் மனதை மயக்கியது. நாங்கள் பள்ளத்தில் இருக்கும் மரங்களை கவனித்து கொண்டிருக்கும் போது இருவாட்சி பறவை (Indian Grey Hornbill) ஒன்று க்கீ....க்கீ....என்று ஓசையெழுப்பியபடி பறந்து சென்றது.
       இரவு உணவுக்கு பிறகு, இரவு கானக சாலையில் செல்வதற்கு, வனத்துறை அதிகாரியிடம் முன் அனுமதி பெற்று இருந்தோம். விடுதியில் இருந்து இரவு 10 மணிக்கு, நாங்கள் காரில் கிளம்பியவுடன், விடுதியின் பின்புறம் பள்ளத்தில் இருந்தது யானை கூட்டம் ஒன்று மேலே ஏறி, சாலைக்கு அருகில் வந்து நின்றது. எங்கள் கார் பக்கவாட்டில் யானை கூட்டம், நாங்கள் காரின் விளக்கை அணைத்து விட்டு, பெரிய காட்டுயிரை ஆவலோடு அருகில் இருந்து ஐந்து நிமிடங்கள் இரசித்து பார்த்தோம். காட்டு யானைகளை மிக குறைந்த தூரத்தில் பார்த்தது எங்களுக்கு மகிழ்ச்சி இரட்டிப்பாகியது.

        மேற்கு தொடர்ச்சி மலையும், கிழக்கு தொடர்ச்சி மலையும் சங்கமிக்கும் தென் தக்காண பீடபூமி பரப்பில் பரந்திருக்கும் சத்தியமங்கலம் காடுகள், யானைகள் வாழ்விடங்களில் முக்கிய பகுதியாகும். 2011ஆம் ஆண்டு உலக இயற்கைப்பாதுகாப்பு நிதி அமைப்பு (WWF) எடுத்த கணக்கெடுப்பின்படி, சத்தியமங்கலம் சரணாலயத்தில் யானைகளின் எண்ணிக்கை 850, பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதே வன பகுதியில் 1200 மேல் இருந்த இந்திய யானைகள், இன்றைக்கு குறைந்திருக்கிறன. இந்திய யானைகளின் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் இயற்கையான வழித்தடங்கள் மனிதர்களால் சிதைக்கப்பட்டன, யானைகள் வாழ்விடங்கள் அழிந்து,சுருங்கி காடுகள்,காடு சார்ந்த பகுதிகள் வேலிகள் போடப்பட்டு, எல்லைக்கோடுகளால் தடுக்கப்பட்டன. இன்றைக்கு அழியும் நிலையில் இருக்கும் புலிகளுக்கு அடுத்ததாக இந்திய யானைகள் இடம் பிடித்து இருப்பது நமது பண்பாடு சீரழிந்து விட்டதையே காட்டுகிறது.
         ஆசனூர் பகுதியில் வன விலங்குகளின் வாழ்விடம் இன்றைக்கு தோட்டங்களாகவும், பண்ணைகளாகவும் மாறி விட்டது. யானைகள் வழித்தடங்கள் விடுதிகளாலும், தடுப்புவேலிகளாலும், மின்வேலிகளாலும் மறைக்கப்பட்டு, திசைமாறி அலைந்து திரிந்து தோட்டத்து உயர் மின்அழுத்தம் மிக்க மின்வேலிகளில் சிக்கி உயிரை இழக்கின்றன. மக்கள் தொகை பெருக,பெருக யானைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
            புகழ் பெற்ற முன்னாள் வேட்டைக்காரர் கென்னத் ஆண்டர்சன் 1960 களில், கெத்தேசால், கொள்ளேகால், திம்பம் மலை பகுதிகளில் தங்கியிருந்து வேட்டைக் கதைகளை எழுதி இருக்கிறார்.அவர் குறிப்பிடும் திம்பம் காட்டுபங்களா இன்றைக்கு சிறப்பு அதிரடிப் படை (Special Task Force)  கட்டுப்பாட்டில் உள்ளது. பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி இல்லை. கென்னத் ஆண்டர்சன் எழுதி இருக்கும் வேட்டைக்கதைகளில் கூறப்படும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனை மற்றும் மிகைப்படுத்தபட்டவை என இயற்கையாளர் தியோடர் பாஸ்கரன் குறிப்பிடுகிறார். இருப்பினும் கென்னத் ஆண்டர்சன் கதைகளை படித்து காடுகளில் சுற்றி திரிந்தவர்கள் ஏராளம். கென்னத் எழுதிய எட்டு நூல்களில் இருபது கதைகளை எழுதியிருக்கிறார். அவரது முதல் புத்தகம் Nine Man-Eaters and One Rogue 1954 ஆம் ஆண்டு (George Allen & Unwin ltd) லண்டன் வெளியீட்டார்களால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. அவரது வேட்டைக்கதைகளைப் படித்த இயற்கை ஆர்வலர்கள் சிலர், கென்னத் ஆண்டர்சன் இயற்கை சங்கம்  (Kenneth Anderson Nature Society) என்ற பெயரில் இயங்கி வருவது  குறிப்பிட்டதக்கது. இச்சங்கம் மேலகிரி வன சரகத்தை சரணாலயமாக அறிவிக்கக்கோரி தமிழகஅரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கென்னத் ஆண்டர்சன் 1960களில் உலவிய பகுதிகளில் எங்கள் இரவு பயணம் தொடர்ந்தது.   
                                           கொள்ளேகால் பாதையில் இரவு 10 மணிக்கு மேல் சென்றால் வேங்கை அல்லது சிறுத்தை இரண்டில் ஏதாவது ஒன்று உங்களது பார்வையில் தென்படலாம் என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ஒருவர் கூறியது நினைவுக்கு வந்தது, உற்சாகத்தோடு இரவு பயணத்தை தொடங்கினோம். சாலையின் இருபுறமும் கூர்மையாக கவனித்தவாறு ஜெருமேலம் பிரிவை தாண்டி சென்று கொண்டிருந்தோம். நடுஇரவு 12 மணிக்கு மேல் ஆகிவிட்டது எந்த விலங்கும் எங்கள் கண்களில் தென்படவில்லை. அதிகாலை பறவைகளை பார்ப்பதற்க்கு முன் அனுமதி பெற வேண்டும் என்பதால், எங்கள் பயணத்தை பாதியில் நிறுத்தி விட்டு விடுதிக்கு திரும்பினோம். 
               பூச்சிகளின் ஓசைகளுக்கு இடையே, மலைப்பாதையில் ஒரு திருப்பத்தில் திரும்பி காரை ஓட்டி வந்த நண்பர் சார் சாலையின் நடுவில் பாம்புஎன்று சத்தமாக கூறினார். காரை நிறுத்த சொல்லி, காரை பின் நோக்கி செலுத்தி, காரை விட்டு இறங்கினோம். சாலையின் நடுவில் சுருள் கம்பி போல் சுருண்டு, தலை மட்டும் நீண்டு, பாம்பு அசையாமல் இருந்தது, பாம்பின் தலை மட்டும் அசைந்தது, அதன் வாயிலிருந்து நாக்கு வெளியே வந்து உள்ளே சென்றது. நாங்கள் ஆபத்தானவர்கள் அல்ல என்பதை பாம்பு அறிந்து கொள்ளும் வரை சற்று அமைதியாக நின்று பாம்பை இரசித்து கொண்டு இருந்தோம்.
                      
                 உன்னிச்செடி குச்சி ஒன்றினை எடுத்து பாம்பை மெல்ல தூக்கி காரின் விளக்கு வெளிச்சத்தில் பார்த்த பொழுது புல்விரியன் பாம்பு (Bamboo Pit Viper -Trimeresurus Gramineus) என அடையாளம் தெரிந்தது. மங்கலான புல் பச்சை நிறத்தில் கழுத்து சிறுத்து, அகன்ற முக்கோண தலையுள்ள, அடிப்புறம் வெண்மையான, சுமார் 1 ½ அடி நீளம் இருந்தது. குளிர்ந்த இரவில், சாலையை கடந்து வரும் சிறுபல்லி, ஓணான், தவளைகளை வேட்டையாடுவதற்காக சாலையின் நடுவில் புல்விரியன் பாம்பு அமர்ந்திருக்கிறது. பொதுவாக பகலில் தூங்கி விட்டு இரவில் வேட்டையாடும் இப்பாம்பு, கிழக்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வாழ கூடிய (Endemic) பகுதிகளில் காணப்படுகிறது. புல்விரியனின், புல் போன்ற பச்சை நிறத்தின் மேல்புறத்தில் சிதறிய கறுப்பு வளையங்கள் தென்படுகிறது. பெரும்பாலும் மரம், செடிகொடிகள் மற்றும் மூங்கில் செடிகளில் வாழ்வதால், மூங்கில் செடியில் அசையாமல் நீண்டு இருந்தால், மூங்கில் செடியின் கிளை போன்று தோற்றமளிக்கும். சிறப்பான உருமறை தோற்றத்தால் இப்பாம்பை மூங்கில் விரியன் என்று சிலரால் அழைக்கப்படுவது பொருத்தமாக இருக்கிறது.
               பொதுவாக குழி விரியன் (Pit Vipers) பாம்புகள் நம் நாட்டில் 15 வகைகள் காணப்படுகின்றன. தென் இந்தியாவில் மட்டும் ஐந்து வகையான குழி விரியன்கள் காணப்படுவதுடன், மேற்கு மற்றும் கிழக்கு மலைத் தொடர்களில் குறிப்பிட்ட உயரங்களில், குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வாழ கூடிய (Endemic) 4 வகையான குழி விரியன் பாம்புகள் (Pit Vipers) காணப்படுகின்றன. 1. Large- scaled Pit Viper (Trimeresurus macrolepis) 2. Malabar Pit Viper (Trimeresurus malabaricus) 3. Horseshoe Pit Viper (Trimeresurus strigatus)  4. Bamboo Pit Viper (Trimeresurus Gramineus). மற்றொரு வகையான திமில் மூக்கு விரியன் பாம்பு (Hump-nosed Pit Viper - Hypnale hypnale) மேற்கு மலைத் தொடரில் வடக்கு பெல்காம் வரையில் பரவலாக காணப்படுகின்றன. நாங்கள் ஆசனூர் பகுதியில் பார்த்த புல்விரியன் பாம்பும் (Bamboo Pit Viper -Trimeresurus Gramineus) குழி விரியன் பாம்புகளின் வகையை சார்ந்தது.   

                      
                                பரிணாமத்தில் பாம்புகளின் பங்களிப்பு மகத்தானது. புழு, பூச்சிகள், எலிகள், தவளைகள், சிறு பறவைகள் போன்ற உயிரினங்களை உணவாக்கி, உயிரினச் சூழல் சம நிலையில் இயங்குவதற்கு, இப்புவியில் பாம்புகளின் பங்கு இன்றியமையாதது. நம் நாட்டில் காடுகள், சமவெளிகள், மலைகள், சதுப்பு நிலங்கள், நீர் நிலைகள் என பல்வேறு தட்ப வெப்ப இடங்களில்,  சுமார் 270 வகையான பாம்புகள் வாழ்கின்றன.  அதில் சுமார் 40 வகையான பாம்புகளுக்கு மனிதர்களுக்கு மரணத்தை விளைவிக்க கூடிய அளவிற்கு நஞ்சு இருப்பினும், சிறப்பாக மருத்துவத்திற்கு பயன்பட கூடிய நான்கு வகை பாம்புகளின் கடி தான், இந்தியாவில் ஆண்டு ஒன்றிற்கு சராசரியாக 50,000 மக்கள் மரணத்தை தழுவுகிறார்கள். இதில் 90 சதவீதம் சரியான மருத்துவ சிகிச்சை இன்றியும், நஞ்சு முறிவு மருந்து பற்றாக்குறையாலும் (shortage of Anti Venom) மனிதாபிமானமற்ற அலட்சியத்தாலும் மக்கள் மரணம் அடைகிறார்கள்.

                                   மனிதர்கள் வாழ்விடங்களில் அருகில் வாழும் நான்கு வகை பாம்புகள் 1.நல்ல பாம்பு என்று அழைக்கப்படுகிற நாகம் (Cobra (Naja naja)  2.கட்டு விரியன் என்று அழைக்கப்படுகிற கட்டு வரியன் (Common Kriat-Bungarus caeruleus) 3. கண்ணாடி விரியன் (Russell’s Viper (Daboia russelii) 4. சுருட்டை விரியன் (Saw-scaled Viper (Echis carinatus) 
             நாகங்களில் ஐந்து வகைகள் நம் நாட்டில் காணப்படுகின்றன. 1. நல்ல பாம்பு (Spectacled cobra) .2. நாகம் (Monacled  cobra) 3. அந்தமான் நாகம் (Andaman  cobra) 4. மத்திய ஆசியா நாகம் (Central Asian cobra) 5. கரு நாகம் (King cobra)  இதில் இராஜ நாகம் என்று அழைக்கப்படுகிற கரு நாகமும் அடங்கும். கரு நாகங்கள் அடர்ந்த மழைக்காடுகளில் வாழ்தாலும், சில சமயங்களில் காடுகளை ஒட்டி உள்ள ஆற்றங்கரை சமவெளி பகுதி மற்றும் தேயிலை தோட்டங்களுக்குள் இரையை தேடி வருவது கண்டறியப்பட்டுள்ளது. கரு நாகங்கள் மனிதர்களை கடிப்பது மிக அரிது என்றாலும் கடந்த 20 ஆண்டுகளில், தென்இந்தியாவில் நான்கு மனிதர்கள் இதன் கடிக்கு ஆளாகி இறந்து இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் நல்ல பாம்பு பரவலாகவும், கரு நாகம் மழைக்காடுகளிலும் காணபப்டுகின்றன. இதன் நஞ்சு, நரம்பு மண்டலத்தை (Neurotoxin venom) பாதிக்க கூடியது.  
           Kraits எனப்படுகிற வரியன் வகை பாம்புகள் ஐந்து வகைகள் நம் நாட்டில் காணப்படுகின்றன. 1.Common krait  2.Banded Krait  3.Andaman Krait  4.Black Krait 5. Wall’s Sind Krait ஐந்து வகை வரியன் பாம்புகளில் பொதுவாக கட்டு விரியன் என்று அழைக்கப்படுகிற இப்பாம்பு தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகின்றன. இதன் நஞ்சு நரம்பு மண்டலத்தை (Neurotoxin venom)  பாதிக்க கூடியது.
           Vipers எனப்படுகிற விரியன் வகை பாம்புகள் மூன்று வகைகள் நம் நாட்டில் காணப்படுகின்றன. 1. கண்ணாடி விரியன் - Russell’s Viper   2. லேவெண்டின் விரியன்- Levantine Viper 3. சுருட்டை விரியன்- Saw-scaled Viper. கண்ணாடி மற்றும் சுருட்டை விரியன் பாம்புகள் தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகின்றன. நம் நாட்டில் விரியன் வகை பாம்பு கடிகள் மூலம் ஏற்படும் மனித இறப்புகள் அதிகம் என அரசு மற்றும் தனியார் நிறுவன ஆய்வுகள் கூறுகின்றன. விரியன் வகை பாம்புகள் மனித வாழ்விடங்களில் ஒட்டி உள்ள பகுதிகளில் தன் இரையை சார்ந்து வாழ்வதாலும், மனிதர்களின் கவன குறைவாலும், வெளிச்சம் குறைவான நேரத்தில் பாம்புகளின் மேல் மனிதர்களின் கால் படுவதாலும் விரியன் பாம்புகளின் கடி என்னும் விபத்து ஏற்படுகிறது. எந்த சூழ்நிலையிலும், தன் மேல், எதுவும் படாத வரையில் அவசரபட்டு பாம்புகள் கடிப்பதில்லை, தன் நஞ்சை விரயமாக்க விரும்புவதில்லை. சில நேரங்களில் தன்னை காத்து கொள்ளும் இயல்பூக்கத்தில் (Instinct) பொய்க்கடி (Dry bite) கடிப்பது உண்டு. பொய்கடி பட்டவர்களே அதிசயக்க தக்க வகையில் மருத்துவ சிகிச்சை இன்றி உயிர் பிழைக்கின்றார்கள். இதன் நஞ்சு இரத்த நாளங்களை (Hemotoxin venom) பாதிக்க கூடியது.
         பாம்புகள் எப்பொழுதும், எல்லா நேரங்களிலும் மனிதர்களை விட்டு விலகியே செல்கின்றன. தோட்டங்களிலும், வயல்வெளிகளிலும், காடுகள் அருகில் உள்ள கிராமங்களிலும், பாம்புகள் இருப்பது அறியாமல் அருகில் செல்லும் போது அல்லது மிதிபடும் போது மட்டுமே கடி என்னும் விபத்து ஏற்படுகிறது. ஊருக்கு ஒதுக்குப்புறம், தோட்டம் துரவுகளில், இரவு நேரத்தில் உறுதியான் தடித்த காலணிகள் அணிந்து செல்வதும், கைகளில் நவீன கைவிளக்கு எடுத்து செல்வதும் பாம்பு கடி என்னும் விபத்தை தவிர்க்க எளிய வழியாகும். கடிபட்டவர்களை உடனடியாக அரசு தலைமை மருத்துவமனைக்கு எடுத்து செல்வது மிக மிக அவசியம்.                                
                      சிறப்பான நான்கு வகை பாம்புகளை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு வந்து விட்டால், பாம்புகளினால் மனிதர்களுக்கு ஏற்படும் கடியும், மரண பயமும் விலகும். மனிதர்களினால் பாம்புகளுக்கு ஏற்படும் தீங்கும், மரண தண்டனையும் நீங்கும். எல்லா வகையான பாம்புகளும் இயற்கையில் உயிரின வலைப்பின்னலில், உணவு சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளது. இன்னும் சிறப்பாக விவசாயத்திற்குப் பெரும் அளவு நன்மை கிடைப்பதில் பாம்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. மனிதர்களுக்கு மறைமுகமான நன்மைகள் தரும் பாம்புகள் பற்றி அறியாமைகளாலும், பீதிகளாலும், தவறான நம்பிக்கைகளாலும் பாம்புகள் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருவது கவலை தரும் செய்தியாகும்.  
 - திருப்பூர் அம்சா, 
இயற்கை ஆர்வலர் .  
நவம்பர்-டிசம்பர் 2015 'காடு இதழில்' வெளியான கட்டுரை. 

No comments

Welcomes you to Nature for Future - A.M.AMSA

Powered by Blogger.