இயற்கையை நேசிப்போம்….


            இயற்கையோடு ஒன்றி மற்ற உயிரினங்களின் துணையோடு வாழ்ந்த வாழ்க்கை மாறிப்போய் அனைத்தையும் அழித்து, அடிமைப்படுத்தும் எண்ணத்தோடு, இன்றைக்கு மனித நாகரிகங்கள் வளர்ந்து வாழ்கின்றோம். உயிர் வாழ்வதற்கான ஊட்ட சத்திற்காகவும், உணவிற்காகவும் கொன்றால் பாவமில்லை, வேடிக்கைகாகவும், வெறிக்காகவும், விளையாட்டுக்காகவும் உயிர்களை கொன்றால் தான் பாவம், உயிர் வதை செய்வது உன்மத்தம், உணவுக்காக என்றால் பாவமில்லை என்ற மானுட பண்பாட்டில் பரிணமித்த மனித நாகரிக வளர்ச்சியில் "கொன்றால் பாவம் தின்றால் போகும்என்ற  பழமொழி வழக்கத்திற்கு வந்து இருக்கலாம். வளர்ப்பு விலங்குகளுக்கும், காட்டுயிர்களுக்கும் வேறுபாடு அறியாமல், இன்றைக்கு பேராசைக்காகவும், வியாபாரத்திற்காகவும், வசதி என்ற சுயநலத்திற்காகவும் காட்டுயிர்களை வெறி கொண்டு தாக்குவதும், அதன் வாழ்விடங்களை வேகமாக அழிப்பதும், வளர்ப்பு விலங்குகளை, பிராணிகளை அதி நவீன மருந்துகள் மூலம் சகட்டு மேனிக்கு உற்பத்தி செய்வதும், உயிர் இலக்கணம் தெரியாமல் பேராசைக்காக, வியாபாரத்திற்காக வளர்ப்பதும், கொல்லுவதும், கொல்லபட்டால் ஆனந்தம் அடைவதும் எந்த வகை உரிமை என்று தெரியவில்லை.
   
      



              வீட்டிற்கருகில் இரவில் ஆந்தை குரல் எழுப்புவதை அபச குணம் என்கின்றோம்,  ஆந்தை எலிகளை வேட்டையாடி எலிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தி நமக்கு மறைமுகமாக நன்மை செய்வதை அறியாமல் இருக்கின்றோம்.  சாதாரணமாக கிராமப்புறங்களில் இருக்கும் வெண் ஆந்தையை  நகர்ப்புறங்களில் பார்த்தால் “அதிசய பறவை என ஆச்சரியப்படுகிறோம். காக்கை, குயில், குருவி, மைனா மற்றும் சில பறவைகளை தவிர எந்த பறவையைப் பார்த்தாலும் வெளிநாட்டு பறவை என கூறுகிறோம். குறிப்பாக ஊடகங்கள், நீர் பறவைகளை ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த வலசை பறவைகள் என்று கூறுவதை நம்புகின்றோம். அலங்குவை  (Ant Eater) பார்த்தால் அதிசய விலங்கு, இந்திய காடுகள் என்றாலே சிங்கம் வாழும், அது காட்டு ராஜாவாக இருக்கும் என நம்புவதுடன், சிங்கத்தின் குகையில் சென்று சிங்கத்தை சந்திப்போம் எனக்  வசனமாக கூறுவதும்,  சிங்கம் தனியாக தான் வேட்டையாடும், பன்றிகள் தான் கூட்டமாக சுற்றி திரியும் என்றும் நம்புகின்றோம். கல்வி வளர்ச்சிக்கு பிறகு இயற்கையைப் பற்றிய நுண்ணுணர்வு அற்றவர்களாகவும்,  இயற்கையை புரியாதவர்களாகவும் மாறி விட்டோம்.  அத்துடன் இயற்கைக்கு தண்டனை கொடுக்க தெரியாது, ஆனால் பக்க விளைவுகளை உண்டாக்கும் என்பதையும் அறியாமல் வாழ்கின்றோம். எல்லா உயிர்களுக்கும் மனிதர்களே மிக பெரிய எதிரி என்பதை எப்பொழுது புரிந்து கொள்ளுகிறோமோ, அதற்கு பிறகு தான் இயற்கையை நம்மால் நேசிக்க முடியும்.

No comments

Welcomes you to Nature for Future - A.M.AMSA

Powered by Blogger.