இயற்கையை மதிப்போம், கானக உயிரினங்களை காப்போம், காட்டுயிர்கள் அழிவுக்குள்ளாவதை தடுப்போம் !

May 28, 2012

புலி யாருக்கு? ஆவணப் படம்- விமர்சனம்


புலி யாருக்கு? ஆவணப் படம்- விமர்சனம் 


ஒரு மதிய வேளையில், கதிரவனின் ஒளிக்கதிர்கள் கானகம் முழுவதும் பரவியிருந்த நேரத்தில், தக்காண பீட பூமியின் ஓரிடமான, மத்திய பிரதேசத்தில் உள்ள பன்னா தேசிய பூங்காவில் (இந்திய கரடி ஆராய்ச்சியாளரும்,இன்றைய ஆப்பிரிக்கா சிங்கம் மற்றும் வரிக்குதிரை ஆராய்ச்சியாளருமான திரு யோகனந்தின் விருந்தினர்களாக இருந்த சமயத்தில்) யானை சவாரி மூலம் புலியை தேடிச்செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
          கானகத்தில் யானை மூலம் சுற்றி வருவது, காண முடியாத காட்டுயிர்களை கண்டு களிக்கும் ஓர் அரிய வாய்ப்பு. நாங்கள் புறப்பட்டு சில மணி நேரங்கள் ஆகியும் புலியை பார்க்க முடியவில்லை. மாலை நேரத்தில் கதிரவனின் ஒளிக்கதிர்கள் மங்கத் தொடங்கிய நேரத்தில், யானையின் மேல் அமைதியாக கானக சூழலை அனுபவித்து கொண்டு, ஒரு பரவசமான மன நிலையில் இலயித்து இருக்கும் வேளையில், அசைந்து சென்று கொண்டிருந்த யானை அசையாமல் நின்றது. எங்கள் எதிரே, வரிப்புலி அமைதியாக, தண்ணீர் நிறைந்து இருந்த ஒரு குட்டையில் படுத்திருந்தது

                                                          .
நாங்கள் வியப்புடன் அந்த கம்பீரமான கானக செல்வத்தை, கண் கூசாமல் பார்த்துக் கொண்டு இருந்தோம்.யானை பீதியில் நடுங்கியது, யானையின் பின்புறம் “சொர் என்று சப்தம், யானை பின்னால் நகர ஆரம்பித்தது. பாகன் அதன் தலையில் இரும்பு தடியால் தாக்கினா(ர்)ன். யானை அசைந்து அடம் பிடித்தது. நாங்கள் யானை நகர்ந்தால் பரவாயில்லை, அடிக்க வேண்டாம் என கூறினோம்.யோகனந்தும் இந்தியில் பாகனிடம் அடிக்க வேண்டாம் என கூறினார். பாகன் முரட்டுத்தனமாகவே நடந்துக் கொண்டார். இருப்பினும் யானை சற்று தள்ளியே நின்றது.
கதிரவனின் வெளிச்சம் குறைய தொடங்கியது. அரை மணிநேரம், நாங்கள் புலியை அதன் அருகில், யானையின் மேல் அமர்ந்து இருந்து பரவசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தோம். புலி அமைதியாக எங்களையே பார்த்த வண்ணம் இருந்தது. அதன் பார்வை “எங்களையும் வாழ விடுங்கள் என்று கூறுவதைப் போல உணர்ந்தோம். கனத்த மனதுடன் நாங்கள் தங்குமிடத்திற்கு திரும்பினோம்.
பண்பாடு உடைய, பக்குவப்பட்ட, நல்லது எது? கெட்டது எது? என சிந்தித்து, சீர்தூக்கி பார்த்து, நல்லதை மட்டும் நாடும், நன் மக்கள் நிறைந்த பொது சமூகத்திற்கு தான் ஜனநாயகம் பொருந்தும். அழிவிற்கு உள்ளாகி வரும், இயற்கை வளங்கள், காட்டுயிர்கள் போன்ற பொதுப் பிரச்சனைகளுக்கு நம்நாட்டில், ஜனநாயக ரீதியில், பொதுக் கருத்து உருவாக்குவது அல்லது மனித நேய அடிப்படையில் தீர்வு காண்பது, முடிவு எடுப்பது சிக்கலை அதிகப்படுத்தும், மேலும் அழிவு அதிகமாகும்.

                                                         
நமது நாட்டின் தேசிய விலங்கான புலியைப் பற்றி, ‘ஆரிஜான் மீடியாதயாரிப்பில், ஆண்டோஎனும் குறும்பட இயக்குனரால், புலி யாருக்கு? (Tiger For Whom?) என்ற தலைப்பில், இக்குறும்படம் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.
புலியை காப்பாற்றலாமா? வேண்டாமா? புலி யாருக்காக? என்ற கேள்விகளுடன் இக்குறும்படம், ‘நேஷனல் ஜியாகரபிக்,டிஸ்கவரி’,’அனிமல் பிளானட், போன்ற சானல்களில் வரும் குறும்படம் போல் எடுக்க வேண்டும் என்ற பாதிப்பில், அறிஞர்கள் பேட்டி,ஆதிவாசிகளின் பேட்டி, அரசியல்வாதிகள் போன்ற தன்னார்வக் குழுக்களின் பேட்டி என பல இடங்களில் வெட்டி, ஒட்டி(Edit) கருத்துக்களை பதிவு செய்து வெளியிட்டு இருக்கிறார்கள்.
மாற்றுக் கருத்துக்காக திரு.தியோடர் பாஸ்கரன் மற்றும் திரு.முகமது அலி கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு, புலிகள் காப்பகத் திட்டம் ஏன் வேண்டும்? புலிகள் ஏன் காப்பாற்றபட வேண்டும், என கருத்து கூற ஆரம்பித்தவுடன், அறிவிக்கப்படாத ‘மின் வெட்டுபோல் கருத்துகளை வெட்டி இணைப்பது, என்ன சொல்கிறார்கள் என்பதை முழுமையாக அறிந்து கொள்ள முடியாமல், கருத்துக்கள் சிதையும் நிலை ஏற்படுகிறது.
ஆதிவாசிகளின் தலைவர் சந்திரன் கூறும் பொழுது 1200 வருடங்களாக நாங்கள் காட்டில் இருக்கிறோம் எனக் கூறுகிறார். 1200 வருடங்களாக நாங்கள் தான் காட்டினை அழித்து விட்டோம் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதை போல் இருந்தது. இன்னொரு ஆதிவாசி பெண்மணி கூறும் பொழுது எங்களுக்கு ‘லோன் கொடுக்கிறார்களா? ‘பென்சன்கொடுக்கிறார்களா?-எதுவும் தருவதில்லை என்று குற்றம் சாட்டுகிறார். ஆகவே நாம் புலிகளை காப்பாற்ற வேண்டுமானால் இவர்களுக்கு லோனும், பென்சனும் கொடுக்க வேண்டும்-என்கிற ரீதியில், வேங்கை இருந்தால் என்ன? செத்தால் என்ன? எங்களுக்கு பொருளாதார உதவி வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது
இக்குறும்படத்தின் மூலம் முதுமலையில் புலிகள் காப்பகம் அமைக்கவே கூடாது, என்கிற சுயநல, பேராசை அரசியல் சொல்லாடல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே புலி யாருக்காக? மக்களுக்காகவா? அல்லது இயற்கைகாகவா? என்ற மறைமுக கேள்விக்கான தலைப்பில் மக்களுக்காக தான் என்ற சார்புப் போக்கு மிக அதிகமாகவே காட்டப்படுகின்றன. இதில் இயக்குநருக்கும் அதே கருத்து இருப்பதாக தெரிகிறது.
இன்றைய சூழ்நிலையில் அழிந்து வரும், ஆபத்தான நிலையில் இருக்கும் வேங்கைக்கு ஆதரவு நம்மிடம் இல்லை என்பது புலப்படுகிறது. பல்லுயிர் வளத்தை அளக்க, அளவிடும் கருவியாக புலிகள் இருப்பதை, அறிஞர்களும், ஆராய்ச்சியாளர்களும், இயற்கையாளர்களும் பல ஆண்டுகளாக ஆய்வு ரீதியாக கருத்துகளை கூறியும், பலநூல்கள் மூலம் எடுத்து கூறியும், புலிகள் தேவையில்லை- எங்கள் வாழ்வும், பேராசையும் தான் முக்கியம் என வெளிப்படையான, ஒரு சார்பான கருத்துக்கள் நிறைந்து இருப்பதை உணர முடிகிறது.
குறிப்பாக புலிகள் வாழும் மையப்பகுதியில் (Core Zone) இருந்து, மக்கள் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என்ற கருத்துக்கான காரணங்களை விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்துக்கூறி பொது சிந்தனைக்கும், விவாதத்திற்கும் வித்திடாமல், புலிகள் காப்பக திட்டம்-ஆதிவாசிகளுக்கு எதிரானதாக சித்தரிப்பது, உள்நோக்கம் கொண்ட அரசியலாகவே தெரிகிறது.
ஒப்புக்காக வனத் துறை அதிகாரி ஒருவரின் பேட்டி, தமிழகத்தில் தமிழ் தெரிந்த வனத்துறை அதிகாரியே இல்லையா? C.R. பிஜோய் (மனித உரிமை செயல்பாட்டாளர்) Yellow Stone National Park ன் விவரத்தைக் கூறி பிரச்சனையின் ஆணி வேரை அறியாதவர்ப் போல், ‘சப்பைக்கட்டு பேட்டி?, இன்னொருவர் சட்ட நுணுக்கங்களை எல்லாம் எடுத்துக்காட்டி ‘குட்டி அரசியல்வாதி போன்ற பேட்டி? இவர்களுக்கெல்லாம், புகழுக்காகவும், செல்வாக்குகாகவும் தான் புலிகள் தேவைபடுகிறதே தவிரே, இயற்கையை காப்பாற்ற வேண்டும் என்பதற்கல்ல என்பதை இக்குறும்படம் நன்றாக விளங்க வைக்கிறது.
C.R.பிஜோய், வாசு, சங்கீதா பீனு, ரோஹன் போன்றவர்கள் முல்லைப் பெரியாறு அருகில், பாதுகாக்கபட்ட காட்டுக்குள் கேரளா அரசு புதிய அணை கட்ட முயற்சிப்பதை பற்றி ஏதாவது கருத்துக் கூறியிருப்பார்களா? முல்லைப்பெரியாறு அணைப் பற்றி மூச்சு விட தயாராக இல்லாத மனித உரிமை பேசும் இவர்கள், புலிகள் காப்பகத்திட்டதிற்கு எதிராக மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், மனித உரிமை மீறப்படுகிறது, குறிப்பாக ஆதிவாசிகளை அடக்கி, அடிமைகளாக ஆக்க அரசு முயற்சிக்கிறது என ஆர்பரித்து கருத்து கூறும் இவர்கள், தமிழகத்தில் தென் மாவட்டத்தில் இலட்சக்கணக்கான ஏக்கர் விவசாயம் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு, மக்களும் பாதிக்கப்படுகிறார்களே- எங்கே போயிற்று மனித உரிமை? கேரளா அரசை எதிர்த்து குரல் எழுப்புவார்களா?
        மத்திய அரசை, உச்ச நீதிமன்றத்தை மீறும், தகாத செயலை செய்யும் கேரளா அரசு, வனத்தை-வனத்தோடு சேர்த்து மக்களுக்கும் கேடு நினைத்து, காரிய மாற்றும் அநீதியை கண்டும் காணாமல் இருந்து கொண்டு, புலிகள் காப்பகத் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் இவர்கள் அரசியலை- தமிழக, இந்திய மக்கள் உணர வேண்டும் இக்குறும்படத்தின் மூலம். கேரளாவில் நடந்தால் முற்போக்கு, தமிழகத்தில் நடந்தால் மனித உரிமை மீறல், இன்னும் தெளிவாக சொன்னால் முதுமலை வன பகுதியில், காடுகள் அழிக்கப்பட்டு, தனியார் தோட்டங்கள் உருவாகி ஏகபோக சொத்துக்களாக இருப்பது இவர்கள் வழிவந்தவர்கள் ஆதிக்கத்திலே தான் - புலிகள் அழிந்தாலும்,காடுகள் அழிந்தாலும், தங்கள் சொத்துக்கள் காப்பாற்றபட வேண்டும் என்பதற்காக ஆதிவாசிகளை கேடயமாக பயன்படுத்தி, ஆதிவாசிகளின் நலனுக்கு எதிரானதாக கூறி, ஆதிவாசிகளுக்காக கண்ணீர்விடும் இவர்கள், ஆதிவாசிகளின் நலன்களில் சிறு துரும்பை கூட அசைக்காதவர்கள், ஆதிவாசிகளின் நல்வாழ்விற்காக எதையும் செய்யாதவர்கள், இவர்கள் பேசும் மனித உரிமையை எப்படி நம்புவது?
      அணைகள் கட்டுதல், காடழிப்பு, போன்ற இயற்கைக்கு எதிரான எந்த திட்டமும் இல்லாமல், இயற்கையை பாதுகாக்கும் திட்டத்தோடு, சில நல்ல முயற்சிகளை தமிழகப் பகுதியில் திட்டமிடப்பட்டு செயல்படுத்த துவங்கினால், இதை எதிர்க்கும் அனைவரும் கேரளா, கருநாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் அணைத் திட்டங்களைத் தடுத்து காடுகளுக்கும், அதை சார்ந்து இருக்கும் மக்களுக்கும் ஆதரவாக போராட்டங்கள் நடத்த தயாரா? எல்லா மாநிலங்களும் இந்தியாவில் தானே இருக்கிறது? அங்கெல்லாம் பொருளாதார நலன் என்ற கண்ணோட்டத்தில் வாயடைத்து கிடக்கிறார்களே, இந்த மனித உரிமை போராளிகள்?
    உணவு தொடரின் வட்டத்தில் முதலில் இருக்கும் புலிகள், உயிர் சூழலில் மற்ற உயிரினங்கள் மற்றும் சுற்று சூழலில் காடுகள், ஆறுகள், ஓடைகள், புழு, பூச்சிகள் அனைத்து பல்லுயிர்களும் நலமாக, வளமாக இருக்க வேண்டுமானால் புலிகள் தேவையான எண்ணிக்கையில் நலமாக இருக்க வேண்டும். நம் நாட்டில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறதே, தேசிய விலங்குக்கு இந்த நிலை என்றால், காரணம் என்ன? 
     ஆங்கிலேயர் துப்பாக்கி கொண்டு வந்து வேட்டையாட ஆரம்பித்த போது தான் வன விலங்குகளுக்கு கேடு காலம் ஆரம்பித்தது என்ற கருத்து ஒன்று உண்டு. இக்கருத்து உண்மையில்லை, ஆங்கிலேயர் இங்கு ஆங்கில மருத்துவத்தை கொண்டு வந்து நமக்கு கொடுத்த பிறகு தான், வனவிலங்குகளுக்கு கேடுகாலம் ஆரம்பித்தது, காடு அழிந்தது, சுற்றுச்சூழல் கெட்டழிந்தது, இயற்கைக்கு எதிரான அரசியல் பேச்சுக்கள் அதிகமாகி, புலிகளும், யானைகளும் அழிவின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன.
     C.R.பிஜோய், அமெரிக்காவிலுள்ள Yellow Stone National Park-ஐ உருவாக்குவதற்காக, செவ்விந்தியர்களை வேட்டையாடி உருவாக்கியதாக கூறுகிறார். அதேப் போல், அதேக் காலகட்டத்தில் உலகில் பல்வேறு சம்பவங்கள் நடந்திருக்கலாம். நம் நாட்டில் மதுரையை தூய்மைப்படுத்துவதாகக் கூறி எட்டாயிரம் சமணர்களை கழுவேற்றி கொல்லவில்லையா? புத்தர்களை வேரோடு அழித்து விரட்ட வில்லையா? வரலாற்று சம்பவங்களை அழிந்து வரும், அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களோடு ஒப்பிட்டு கூறலாமா?பழைய சமண, புத்த சமயங்கள் செழித்திருந்த போது உயிரினங்கள் வளமோடு செழிப்பாய் இருந்தன.பௌத்த, சமண, கோட்பாடுகள் இயற்கையை போற்றின, வளமாய் இருக்க வழி செய்தன. மணிநீரும், மண்ணும், மலையும், அணிநிழற் காடும் உடையது அரண் என வள்ளுவர் குறள் படைக்கவில்லையா? (இன்றைக்கு புத்தயிசம் சிதைந்த பிறகு, ஹீனயாணம், மகாயாணம் என்று பிளந்த பிறகு, மனித உயிர்களையே கிழித்து கோரத் தாண்டவம் ஆடுகிறது, இயற்கை, மற்றும் உயிரினங்கள் நிலை கேட்பாரற்று கிடக்கிறது-அது பற்றி தனியாக ஆய்வு தொடர்கிறது) சங்ககாலம் இயற்கை பாரம்பரியம் மிக்கது, சங்ககாலப் பெண், புலியை முறத்தால் துரத்தியப் புறநானூற்று செய்தியின் படி பார்த்தால், புலிகள் பெருகி இருந்தன. மனிதர்கள் அருகில் வளமாய் வாழ்ந்தன. புலிகள் நலமாய் இருந்திருக்குமேயானால், காடுகள் செழிப்பாய் இருந்திருக்கும்.
    புலிகள் காப்பகத் திட்டத்திற்கு அமெரிக்கா உதாரணம் தேவையில்லை, கேரளா சபரிமலைக் காடுகளே சிறந்த உதாரணம்- புலியிடம் பாசத்தோடு பழகி, புலிமேல் அமர்ந்து பவனி வந்த அய்யப்பன் இருந்த இடம், புலிகள் வாழ்ந்த காடு. புலிகள் இருந்த சபரிமலையில், அய்யப்பன் கோயில் உருவாகிய பிறகு, புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்டன, அழிந்து போயின, நமக்கு புலிகளை வழிபடதான் தெரியும், வாழ வைக்க தெரியாதே? C.R.பிஜோய் அவர்கள் கேரளாவில் உள்ள சபரிமலைப் பற்றி கூறி இருந்தால் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும். நாம் நடந்ததைப் படிப்பினையாக கொண்டு கூறுகிறோம். சபரிமலையில் நடந்ததைப் போல் முதுமலையிலும் நடக்க வேண்டுமா? சாலை விரிவாக்கத்திற்காக சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதைப் போல, பொதுநலன், நாட்டுநலன், எதிர்கால மனிதகுல நலன் கருதி புலிகளை காப்பதற்காக புலிகள் வாழும் காட்டிலுள்ள மனித ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
            மனித உரிமை, மக்கள் உரிமை என்று பேசும் உரிமைவாதிகள், எந்த மனித உரிமையை பற்றி பேசுகிறார்கள் என தெரியவில்லை? இவர்களுக்கு பாதிக்கப்படும் மனிதன் எந்த சாதி, எந்த மதம், எந்த மொழி என்ற வேறுபாடுகளுக்கு தக்க குரல் எழுப்புவதும், சக மனிதன் பாதிக்கப்படும் பொழுது ஒரே குரலில், ஒத்த கருத்துடன், ஓர் அணியில் திரண்டு போராடுவார்களா? நம் நாட்டை பொறுத்த வகையில் மனித உரிமைகள் இல்லை, சாதி,மதம்,மொழி வாரியாக சார்புடன் பேசும் மனித உரிமைவாதிகள் தான் இருக்கின்றனர். இந்த நிலையில் இவர்கள் இயற்கைக்கு எதிராகவும், புலிகளுக்கு எதிராகவும், தங்கள் நிலைபாட்டை அறியாமல், உயர்ந்த சிந்தனை இல்லாமல், மனித உரிமை பேசும் ஆதிவாசிகளின் காதலர்கள், புலிகள் காப்பக திட்டத்தை கண்மூடித்தனமாக எதிர்ப்பதை கைவிட வேண்டும்.   
        “சோலூர் மட்டம் பகுதியில் எங்களை ஏமாற்றி பட்டா நிலங்களை புடுங்கி, எங்களை அடிமை ஆக்கியவர்கள் படுகர்கள், இப்போ படுகர்கள் எல்லாம் வசதியானவர்களாக இருக்கிறார்கள்”- என ஆதிவாசி சங்க தலைவர் சந்திரன், இக்குரும்படத்தில் குற்றம்சாட்டுகிறார். ஆதிவாசிகளை ஏமாற்றியது புலிகள் அல்ல, ஆனால் புலிகளுக்கு எதிராக பேசும் அனைவரும் ஆதிவாசிகளுக்காக தான் இந்த போராட்டம் என இக்குறும்பட இயக்குநர் உட்பட பலரும் கருத்து கூறுகின்றனர். ஆதிவாசிகளுக்கு ஆதரவாகப் பேசும் இவர்கள், எதிர்காலத்தில் ஆதிவாசிகளை ஏமாற்றி, கானகத்தையும், கானக செல்வத்தையும் அபகரிக்க மாட்டார்கள் என யாரும் உத்தரவாதம் தரவில்லை? “எதிர்காலப் பணக்காரர்களுக்கு பயன்பட தான் இந்த காடு”-என  ஆதிவாசித் தலைவர் சந்திரன் கூறுவதைப் போல – புலிகள் காப்பக திட்ட எதிர்ப்பு என்பதும் அதை நோக்கி தான் செல்கிறது என்பதை, புலிகள் இல்லாத, காடுகள் இல்லாத மற்ற மாவட்ட மக்கள் உணர வேண்டும்.
   புலிகள் இல்லாத எதிர்கால இந்தியாவில் நமது அடுத்த சந்ததி வாழப் போகும் கொடுமையை உணர்ந்தவாறு, பன்னா தேசிய பூங்காவில் நாங்கள் பார்த்தப் புலி,இயற்கைச் சூழல் உயிர்ப்புடன் இருப்பதற்கான நம்பிக்கையை கொடுத்தது. ஆனால் இன்றைக்கு பன்னாவில் புலிகள் இல்லை என்ற செய்தியை கேள்விபடுகிறோம். உயிரினங்களின் சமநிலைக் கருவி இன்று இல்லை- இப்பொழுது கூறுங்கள் புலி யாருக்கு? 

நன்றி
புலி யாருக்கு? -ஆரிஜான் மீடியா.
                  

  

No comments:

Post a Comment

Welcomes you to Nature for Future - A.M.AMSA

Face Book -post 1

Face Book- post 2

FACE BOOK- POST 4

Face book -Post 3

Face Book - Post 5