மூங்கில் இலை மேலே....... பாரியும் நானும்



மூங்கில் இலை மேலே
சந்தோஷத்தை வாங்கமுடியாது என்று சொன்னவர் நாய்க்குட்டிகளை அறிந்திருக்கவில்லை - ஜீன்ஹில் (Tears and Laughter போன்ற நாய்கள் பற்றிய நூல்களை எழுதியவர்).
சென்னையில் நான் கௌரவக் காட்டுயிர் காவலராக இருந்தபோது என்னுடைய நண்பரொருவர் தொலைபேசியில் கூப்பிட்டுக் குரங்கு ஒன்றைத் தான் செல்லப் பிராணியாக வளர்ப்பதாகவும் அதற்கு வனத்துறையிடமிருந்து லைசென்ஸ் வாங்குவதெப்படி என்றும் கேட்டார். மருத்துவரீதியாகக் கைவிடப்பட்டு, சாவின் விளிம்பிலிருப்பவர்களுக்கென நடத்தப்படும் விடுதி ஒன்றில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். இருபது பேர் உள்ள அந்த மருத்துவமனைக்கு அவர் சில சமயம் தனது செல்லக்குரங்கையும் கூட்டிக்கொண்டு போவதாகவும், அதைக் கண்டவுடன் அங்கிருக்கும் நோயாளிகளுக்கு முகத்தில் ஒரு ஒளிவருவது போல புன்னகை தோன்றுவதைப்பற்றியும் அவர் கூறினார். இவரைக் காணும்போது "மறுபடியும் குரங்கை எப்போது கூட்டிக்கொண்டு வருவீர்கள்?" என்று கேட்பார்களாம்.
என் மனைவியின் தாயார் எங்கள் வீட்டில் முதிர்ந்தவயதில் படுத்த படுக்கையாயிருந்தார். மருத்துவர் இன்னும் சிலநாட்கள்தான் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். பேசுவதற்குக்கூடச் சிரமப்பட்ட அவரிடம் "உங்களுக்கு என்ன விருப்பம்? என்ன வேண்டும்?" என்று கேட்டோம். "பூனைக்குட்டி"என்று மட்டும் அவர் மெல்லியகுரலில் சொன்னது கேட்டது. தினமும் சாப்பாட்டு நேரத்திற்கு எங்கள் வீட்டிற்கு வரும் தெருப்பூனைக்குட்டி ஒன்றைப் பிடித்து அவரது அறையில் விட்டு விட்டோம். அது விளையாடியதையும் கத்தியதையும் மகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டிருந்தார்.(அந்தப்பூனை மைக்கண்ணி எங்கள் வீட்டிலேயே தங்கிவிட்டது. இன்றும் எங்களுடன் இருக்கிறது.) விலங்கு உலகத்துடன் ஒரு பிணைப்பை மனிதர் உணரும் தருணம் அது. அத்தகைய பிணைப்பு, மரண இருளின் பள்ளத்தாக்கிலிருப்பவர்களுக்கும் மகிழ்ச்சிக்கீற்றைத் தருகிறது.
‘செல்லப்பிராணி மருத்துவம்’ (pet therapy) என்று குறிப்பிடப்படும் இத்தகைய அணுகுமுறை உலகின் பல இடங்களில் இன்று பயன்படுத்தப்படுகிறது. நாய், பூனைபோன்ற வீட்டுப்பிராணிகள் இதில் ஈடுபடுத்தப்படுகின்றன. இவற்றை எதிர்கொள்பவர்களுக்குப் புத்துணர்ச்சி உண்டாகிறது. சிறிதுநேரமென்றாலும், தங்கள் வலியையும் துயரையும் மறந்து நாயின் அல்லது பூனையின் மேல் தங்கள் கவனத்தைச் செலுத்துகிறார்கள். இந்தச் செல்லப் பிராணிகள் இத்தகைய பாதிப்பை எப்படி ஏற்படுத்துகின்றன? அவை எதையும் கைமாறாக எதிர்பார்ப்பதில்லை. நிபந்தனையற்ற அன்பை மட்டுமே தருகின்றன. உன்னைப் பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி என்கின்றன. நம் முழுக்கவனத்தையும் ஈர்க்கின்றன.
நாய்களை வளர்க்கும் சிலர் தாங்களாக முன்வந்து இம்மாதிரி மருத்துவ விடுதிகளுக்குத் தங்கள் செல்லப் பிராணிகளுடன் சென்று நோயாளிகளுடன் சிறிதுநேரம் செலவிடுகின்றனர். இந்தப் பணியைத் தாங்கள் செய்ய-முடியும் என்று விடுதிக்குத் தெரிவித்த பின் அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படுகிறது. நோயாளிகளுடன் பழக நாய்கள் கனிவான இயல்புடையனவாய், கொஞ்சங்கூடக் கோபப்படாதவையாய், பொறுமையின் உருவாய் இருக்கவேண்டும். இத்தகைய குணமுடைய சில ஜாதி நாய்கள் உண்டு (பாரம்பரியமாகத் தமிழில் தீக்ஷீமீமீபீ என்னும் பதத்திற்கு ஜாதி என்ற சொல்லைத்தான் பயன்படுத்துகின்றோம்). ஸ்பேனியல், ரிட்ரீவர் போன்ற ஜாதி நாய்கள் யாவரிடமும் நட்புடன், சற்றும் கலவரப்-படாமல், அன்புடன் பழகும் இயல்புடையவை. எந்த ஜாதியிலும் சேராத, கலப்பினங்களான நாட்டு நாய்களும் இப்படி அன்புடன் பழகக் கூடியனவாயிருக்கலாம்.
நம்மூரில் இன்று தெருநாய்களுக்காகப் பரிந்து பேசுவோர் நாய்களுக்குள் ஏன் ஜாதி இருக்க வேண்டுமென்றும் நாய் ஜாதிகளின் அடிப்படையில் நடத்தப்படும் நாய்க் கண்காட்சிகளை எதிர்த்தும் எழுதிவருகின்றனர். நாய் என்பது ஒரே சிறப்பினமானாலும் (Species) அதில் நூற்றுக்கணக்கான ஜாதிகள் (breeds) உண்டு. மாடுகளில் காங்கேயம், ஓங்கோல், சிந்தி என்று இருப்பது போல. இதில் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், நாய்களின் குணங்கள் ஜாதிக்கு ஜாதி வேறுபடலாம். ஒவ்வொரு ஜாதிக்கும் சிறப்பான சில இயல்புகள் உண்டு. அவற்றின் அடிப்படையிலும் உருவ அமைப்பிலும்தான் அவை தனித்தனி ஜாதிகளாக அறியப்படுகின்றன. நாயின் இந்த இயல்புகளைப் பட்டியலிட்டு, இதுதான் இந்த ஜாதியின் இயல்புகள் என்று நிபுணர்கள் தரப்படுத்துகிறார்கள். இந்த இயல்புகளைப் புரிந்துகொண்டு மனிதர்கள் நாய்களை வெவ்வேறு பணிகளுக்குப் பயன்படுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக, மோப்பத்தில் சிறந்தது லேப்ரடார், அல்சேஷன் ஜாதிநாய்கள். அதனால்தான் போலீசார் இவற்றைப் பயன்படுத்துகின்றனர். காவல்காப்பதில், ஊடுருவுவோரைத் நிர்தாட்சண்யமாகத் தாக்குவதில் ராட்வைலர் பெயர்போனது. பெங்களூரில் சில மென்பொருள் கம்பெனிகளில் இந்த நாய்களைக் கூண்டுகளில் வைத்து, இரவில் திறந்து வளாகத்தில் விட்டுவிடுகிறார்கள்.
புகைப்படம்: நிதிலா பாஸ்கரன்
பார்வையற்றோர்களுக்கு உதவியாக வழிகாட்டி நாய்களாக லேப்ரடார் நாய்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. முன்காலத்தில் ஸ்விட்சர்-லாந்தில் பனிபடர்ந்த ஆல்ப்ஸ் மலையில் வழிதவறித் தடுமாறும் பயணிகளை மீட்க அங்குள்ள மடங்களில் கத்தோலிக்க சாமியார்கள் பெர்னார்டு ஜாதிநாய்களை வளர்த்தனர். ஏறக்குறைய ஒரு சிறியமாடு அளவுக்குப் பெரியதான இந்த நாயின் கழுத்தில் பிராந்திக்குடுவை கட்டி விடப்பட்டிருக்கும். வழிதவறியவர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்க இந்த ஏற்பாடு. சென்ற ஆண்டு ஹெயிட்டிதீவில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மோப்பத்தின் மூலம் இஸ்ரேல் நாட்டு மீட்புக் குழுவின் நாய்கள் கண்டறிந்து மீட்டகாட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்தோம். பெர்த்நகரில், ஒரு விவசாயக் கண்காட்சியில், ஆட்டுமந்தையைக் காக்கும்நாய் (Sheep Dog) ஒன்று கட்டளைக் கேற்ப, ஆடுகளை நான்கு நான்காகவும் எட்டு எட்டாகவும் ஓடிஓடி ஒதுக்கியதை நான் வியந்து பார்த்திருக்கிறேன்.
அண்மைக்காலத்தில் சில வேலைகளுக்கேற்ற ஜாதிநாய்கள் உருவாக்கப்படுகின்றன. அப்படி உருவானதுதான் டாபர்மான் ஜாதிநாய். ஜெர்மனியில், டாபர்மான் எனும் பெயர் கொண்ட இறைச்சி வியாபாரி ஒருவர், தன்கடையை மூடியபின், மாலையில் ஒரு மதுக்கடையில் உட்கார்ந்து போலீஸ் வேலைக்கெனப் புதிய நாய் ஜாதியை வடிவமைக்கத் திட்டம் போடுவாராம். அப்படிப் பலமுறை இனக்கலப்பு செய்து உருவான ‘காக்டெயில் ஜாதி’ தான் மோப்பத்தை வைத்து ஆட்களைத் துரத்திப் பிடிக்கும் இயல்பு கொண்ட டாபர்மான். அமெரிக்காவில் தப்பியோடிய கைதி ஒருவரை 100 மைல் துரத்திச் சென்று டாபர்மான் ஒன்று பிடித்ததாக ஒரு பதிவு உண்டு.
                            
கோம்பை, ராம்பூர், முதோல் போன்ற இந்திய நாய்கள், வேட்டைக்கும் காவலுக்கும் கெட்டி. பயமற்றவை. மருது சகோதரர்களின் கோட்டையைக் கோம்பை நாய்கள் பாதுகாத்ததாக அறிகிறோம். பாளையக்காரர் காலத்தில் ராஜபாளையம் நாய்கள் போரில் கூட ஈடுபடுத்தப்பட்டன. ஆனால் செல்லப்பிராணிகளாக அதிலும் குழந்தைகளுடன் பழகுவதற்கும் விளையாடுவதற்கும் வளர்க்க இவை அவ்வளவு தகுதியுடையனவல்ல. அதுமட்டுமல்ல, இவை ‘பார்வைநாய்கள்’ (sight hounds). அதாவது மோப்பத்திறன் குறைவு. இந்த நாய்-களைப் பயிற்றுவிப்பதும் கடினம். ஒரு ராஜபாளையத்தை வளர்த்த அனுபவம் எனக்குண்டு. வீரம்மிக்க, ஓடும்திறன் கொண்ட இந்திய ஜாதி நாய்கள் செல்லப்பிராணிகளாக வீட்டிற்குள் கொண்டுவரப்படவில்லை. குதிரை, மாடு மாதிரி வளர்ப்புப் பிராணிகளாகவே இவை இருந்தன. அந்தப்பழக்கம் வெள்ளைக்காரர்கள் வந்த-பிறகுதான் நம்நாட்டில் பெருமளவில் பரவியது.
நாய், பூனை, ஆடு என்று ஏதாவது ஒரு செல்லப்பிராணியை வீட்டில் வளர்ப்பது, நமக்கும் விலங்கு உலகிற்கும் ஒருபாலத்தை அமைப்பதுபோலாகும். நாங்கள் சிறுவர்களாயிருந்த போது எங்கள் வீட்டில் செல்லி என்ற வெள்ளாடு ஒன்று வளர்த்தோம். அகத்திக்கீரை விற்பவர் எங்கள் தெருவிற்கு வந்தால், அவரை வீட்டிற்குக் கூட்டி வந்துவிடும். மாலையில் ‘செல்லி’ என்று குரல் கொடுத்தால் எங்கிருந்தாவது ‘மே...’ என்று கத்தியவாறு வீடுவந்து சேரும்.
திருமணத்திற்கு முன் நான் தனியாக இருந்த சில ஆண்டுகளைத் தவிர, எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து எங்கள் வீட்டில் நாய்கள் இருந்திருக்கின்றன. இப்போது "எங்களுடன் இருக்கும் ‘பாரி’ பன்னிரெண்டு வயதானவன். His Masters Voice கிராமபோன் கம்பெனி படத்தில் இசைத்தட்டின் ஒலியைச் சின்னநாய் ஒன்று கேட்டுக் கொண்-டிருப்பது போலப்படம் இருக்குமே? அந்த Fox terrier ஜாதி நாய்தான் பாரி. அம்பேத்கார் இந்த நாய்களைத்தான் வளர்த்தார் என்று ஒரு புகைப்படத்தின் மூலம் அறிகிறோம். எனக்கு இந்த மாதிரியான சிறிய நாய்கள்தான் பிடிக்கும். மடியில் தூக்கிவைத்துக் கொள்ளலாம். காரில் எளிதாகக் கூட்டிச் செல்லலாம். டாக்டரிடம் போகும்போது சிரமமின்றி மேசையின் மீது தூக்கி வைக்கலாம். வீட்டிற்குள் பாரி என்னை நிழல்போலத் தொடர்ந்து கொண்டிருப்பான். நான் வெளியூருக்குப் புறப்படும் போது அவனுக்குத் தெரியாமல் சூட்கேசை எடுக்கவேண்டும். அதைப் பார்த்துவிட்டால் சோக உடல் மொழியுடன் மூலையில் சுருண்டுவிடுவான். நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் போது மேசைக்குக் கீழே என் பாதங்களருகே படுத்துக்கொண்டு, தன்கால்களைச் சுவரில் உந்தியபடி ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறான். "இங்கே தூங்காதே. கணினியின் கம்பிகளுக்குள் சிக்கிக்கொள்வாய்" என்றால் கேட்கவே மாட்டான். நாய்க்கலைக்களஞ்சியம் (Canine Encylopaedia) இந்த ஜாதியை stubborn என வர்ணிக்கின்றது. அது அவன் ஜாதிக்குணம்

நன்றி : உயிர்மை மாத இதழ்


No comments

Welcomes you to Nature for Future - A.M.AMSA

Powered by Blogger.