புலி யாருக்கு?(Tiger For Whom?)..... விமர்சனம்



                     ஒரு மதிய வேளையில், கதிரவனின் ஒளிக் கதிர்கள் கானகம் முழுவதும் பரவியிருந்த நேரத்தில், தக்காண பீட பூமியின் ஓரிடமான மத்திய பிரதேசத்திலுள்ள பன்னா தேசிய பூங்காவில் (இந்திய கரடி ஆராய்ச்சியாளரும், இன்றைய ஆப்பிரிகா சிங்கம் மற்றும் வரிக்குதிரை ஆராய்ச்சி யாளருமான திரு க.யோகானந்தின் விருந்தினர்களாக இருந்த சமயத்தில்) காட்டுயிர் ஆசிரியர் திரு ச.முகமது அலி மற்றும் திரு யோகானந்த் உடன் யானை சவாரி மூலம் புலியை தேடிச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

                   கானகத்தில் யானை மூலம் சுற்றி வருவது, காண முடியாத காட்டுயிர்களை கண்டு களிக்கும் ஓர் அரிய வாய்ப்பு. நாங்கள் புறப்பட்டு சில மணி நேரங்கள் ஆகியும் புலியை பார்க்க முடியவில்லை. மாலை நேரத்தில் கதிரவனின் ஒளிக்கதிர்கள் மங்கத் தொடங்கிய நேரத்தில், யானையின் மேல் அமைதியாக, கானக சூழலை அனுபவித்து கொண்டு, ஒரு பரவசமான மன நிலையில் இலயித்து இருக்கும் வேளையில், அசைந்து சென்று கொண்டிருந்த யானை அசையாமல் நின்றது. எங்கள் எதிரே புலி அமைதியாக தண்ணீர் நிறைந்து இருந்த ஒரு குட்டையில் படுத்திருந்தது.

                   நாங்கள் வியப்புடன் அந்த கம்பீரமான கானக செல்வத்தை கண் கூசாமல் பார்த்துக் கொண்டு இருந்தோம். யானை பீதியால் நடுங்கியது, யானையின் பின்புறம் 'சொர்' என்று சப்தம், யானை நகர ஆரம்பித்தது. பாகன் அதன் தலையில் இரும்பு தடியால் தாக்கினான்(ர்). அடம் பிடித்தது, 'ஆசிரியர் யோகானந்திடம் யானை நகர்ந்தால் பரவாயில்லை அடிக்க வேண்டாம் எனக் கூறுங்கள்'  என்றார். யோகனந்தும் இந்தியில் பாகனிடம் கூறினார். பாகன் முரட்டுத்தனமாகவே நடந்துக் கொண்டார். இருப்பினும் யானை சற்று தள்ளியே நின்றது.

                 கதிரவனின் வெளிச்சம் குறைய தொடங்கியது. அரை மணிநேரம் நாங்கள் புலியை அதன் அருகில், யானையின் மேல் இருந்து பரவசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தோம். புலி அமைதியாக எங்களையே பார்த்த வண்ணம் இருந்தது. அதன் பார்வை "எங்களையும் வாழ விடுங்கள்" என்று கூறுவதைப் போல இருந்தது. கனத்த மனதுடன் எங்களது தங்குமிடத்திற்கு திரும்பினோம்.

             பண்பாடு உடைய, பக்குவப்பட்ட, நல்லது  எது? கெட்டது எது? என சிந்தித்து, சீர் தூக்கி பார்த்து, நல்லதை மட்டும் நாடும் நன் மக்கள் நிறைந்த பொது சமூகத்திற்கு தான் ஜனநாயகம் பொருந்தும். அழிவிற்கு உள்ளாகி வரும் இயற்கை வளங்கள் காட்டுயிர்கள் போன்ற பொதுப் பிரச்சனைகளுக்கு நம் நாட்டில் ஜனநாயக ரீதியில், பொதுக் கருத்து உருவாக்குவது அல்லது மனித நேய அடிப்படையில் தீர்வு காண்பது, முடிவு எடுப்பது நமது நாட்டைப் பொறுத்த வரையில் சிக்கலை அதிகப்படுத்தும் மேலும் அழிவு அதிகமாகும்.

          நமது நாட்டின் தேசிய விலங்கான புலிப் பற்றி ஆவணப் படம் ஒன்றினை 'ஆரிஜான்' மீடியா தயாரித்து, ஆண்டோ எனும் குறும் பட இயக்குனர், புலியை காப்பாற்றலாமா?  வேண்டாமா? என்ற ரீதியில் புலி யாருக்கு? (Tiger For Whom?) என்ற தலைப்பில் வெளியிட்டு இருக்கிறார்.
 
       இக்குறும்படம் 'நேஷனல் ஜீயாகரபிக்' டிஸ்கவரி, அனிமல் பிளானெட், போன்ற சானல்களில் வரும் குறும்படம் போல் எடுக்க வேண்டும் என்ற பாதிப்பில், அறிஞர்கள் பேட்டி, ஆதிவாசிகளின் பேட்டி, அரசியல் வாதிகள் போன்ற தன்னார்வக் குழுக்களின் பேட்டி என பல இடங்களில் வெட்டி, ஒட்டி கருத்துக்களை பதிவு செய்து வெளியிட்டு இருக்கிறார்கள்.

      மாற்றுக் கருத்துக்காக காட்டுயிர் ஆசிரியர் மற்றும் திரு தியோடர் பாஸ்கரன் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு, புலிகள் காப்பக திட்டம் ஏன் வேண்டும்? ஏன் காப்பாற்ற வேண்டும்?என கருத்துக் கூற ஆரம்பித்தவுடன், அறிவிக்கப்படாத மின் வெட்டைப் போல் கருத்துக்களை 'கட்' செய்வது (பார்வையாளர்களை) என்ன சொல்கிறார்கள் என்பதை முழுமையாக அறிந்து கொள்ள முடியாமல் படம் பார்க்கும் அனைவரும் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.



     ஆதிவாசிகளின் தலைவர் சந்திரன் கூறும் பொழுது 1200  வருடங்களாக நாங்கள் காட்டில் இருக்கிறோம் எனக் கூறுகிறார். 1200  வருடங்களாக நாங்கள் தான் காட்டினை அழித்து விட்டோம் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதை போல் இருந்தது. இன்னொரு ஆதிவாசி பெண்மணி கூறும் பொழுது எங்களுக்கு 'லோன்' கொடுக்கிறார்களா? 'பென்சன்' கொடுக்கிறார்களா?-எதுவும் தருவதில்லை என்று குற்றம் சாட்டுகிறார். ஆகவே நாம் புலிகளை காப்பாற்ற வேண்டுமானால் இவர்களுக்கு 'லோனும்' 'பென்சனும்' கொடுக்க வேண்டும். வேங்கை இருந்தால் என்ன? செத்தால் என்ன? எங்களுக்கு பொருளாதார உதவி வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது.

                   இக்குறும் படத்தின் மூலம் முதுமலையில் புலிகள் காப்பகம் அமைக்கவே கூடாது, என்கிற சுயநல, பேராசை, அரசியல் சொல்லாடல்கள் பதிவு செய்யப்பட்டிருகிறது. ஆகவே புலி யாருக்காக? மக்களுக்காகவா? அல்லது இயற்கைகாகவா? என்ற மறைமுக கேள்விக்கான தலைப்பில் மக்களுக்காகதான் என்ற சார்புப்போக்கு மிக அதிகமாகவே காட்டப்படுகின்றன.இதில் இயக்குநர்க்கும் அதே கருத்து இருப்பதாக தெரிகிறது.
              
                     இன்றைய சூழ்நிலையில் அழிந்து வரும், ஆபத்தான நிலையில் இருக்கும் வேங்கைக்கு ஆதரவு இந்நாட்டில் இல்லை என்பது புலப்படுகிறது. பல்லுயிர் வளத்தை அளக்க அளவிடும் கருவியாக வேங்கை இருப்பதை, அறிஞர்களும், ஆராய்ச்சியாளர்களும், இயற்கையாளர்களும், பல ஆண்டுகளாக கருத்துக்கள் கூறியும், பல நூல்கள் மூலம் எடுத்துக் கூறியும், புலி தேவையில்லை-எங்கள் வாழ்வும், பேராசையும் தான் முக்கியம் எனக் கூறும் மக்கள் நிறைந்த நாடாக இருப்பதை உணர முடிகிறது.

                   குறிப்பாக புலி வாழும் காட்டில் இருந்து மக்கள் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என காட்டுயிர் ஆசிரியர் வெளிப்படையாக பளிச்சென்று பதில் கூறும் பொழுது அதற்கு முன்பும், பின்பும் என்ன கூறியிருப்பார்? அவரை அறிந்தவர்கள் யூகிக்க முடியும், அறியாதவர்கள்  தவறாக புரிந்துக் கொள்ள கூடிய  அபாயம் ஏற்பட்டிருகிறது. அதேப் போல திரு.தியோடர் பாஸ்கரன் பேச்சு, சிதைந்த ஒலி,எதிரொலி போல, மோசமான வெளிச்சத்தில் புலிக்காக பேசுகிறாரா? ஆதிவாசிகளுக்காக பேசுகிறாரா? புரியாத ஒலிப்பதிவு இவை அனைத்தும் இயக்குநரின் குறைபாடு மட்டுமல்லாமல், புலிகளுக்கு எதிரான சார்பு போக்கு உள்ளவராகவே காட்டுகிறது.   

  தொடரும்.........

No comments

Welcomes you to Nature for Future - A.M.AMSA

Powered by Blogger.