மார்ச் 21 - உலக வன தினம்

இயற்கையில் செயற்கையான வாழ்வியல்


     நமது அன்றாட வாழ்வில் இரசனையற்ற  அழகற்ற,செயற்கையான வாழ்க்கையே வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். அனைவரும் வாழ்வின் அர்த்தம் புரியாமலும், செயற்கையான பொருள்களின் துணையோடு வாழ்வதையே இன்பம், மகிழ்ச்சி என தவறான புரிதலுடன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எப்போதுமே நமது மனம் ஒரு வித வெறுமையுடன் இருப்பதற்கும், பூரண மகிழ்ச்சி கிடைக்காமல் அல்லல் படுவதற்கும், எப்படி இருப்பினும் மன நிறைவு இல்லாமல் இருப்பதற்கும் காரணம் இயற்கையை விட்டு விலகி செயற்கையாக வாழ்வதே ஆகும்.

        இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பு, பரிணாம வளர்ச்சியில் மரபு வழியாக வந்த ஒரு இணைப்பு. இயற்கையை விட்டு விலகி நகர மய சூழலில் செயற்கையான பொருட்களுடன் நம் வாழ்வை அமைத்து கொண்டதே, இயற்கையில் இருந்து அந்நியப்பட்டு போனதற்கு காரணம்.

 
பருவ காலங்கள் மாறும் போது ஏற்படும் சூழல் மாறுதலில்,மெல்லிய காற்று நம்மை வருடி செல்வதை, தென்றல் நம் உடலை சிலிர்க்க வைப்பதை, குளிர் காற்று நம்மை நடுங்க செய்வதை, குயில் கூவுவதை, ஆந்தை அலறுவதை,
நம் வீட்டுக்கருகில் இருக்கும் செடிகளில் வண்ணத்துப்பூச்சி வந்து அமர்வதை, பருவ காலத்திற்குகேற்ப பூச்சிகள், வண்டுகள் அதிகமாகி பிறகு அழிவதை, நாம் கவனிப்பதில்லை, இரசிப்பதும் இல்லை. நாம், நமது, சுயநலம், ஆசை, அந்தஸ்து, பொருள், புகழ் என்று அலையும் நமக்கு இவைப் பற்றி தெரிவதில்லை, நம்மை சுற்றி இருக்கும் இயற்கையை புரிந்துக் கொள்ள முயற்சிப்பதும் இல்லை.இயற்கையை இரசிப்பதால் நல்ல மன நலத்துடன் வாழ முடியும். 


        மலைகளும்,காடுகளும்,நதிகளும்-இயற்கையின் இயக்கத்தில் இயக்கப்பட்டு காலபோக்கில் செதுக்கப்பட்டு,பல்வேறு விதமான உயிரின சூழலும், வாழ்விடங்களும்,பல்லுயிர்க்கு ஏற்றவாறு அமைந்து, உயரினங்கள்   பல்கி பெருக எதுவாக அமைந்தது. பல வகையான உயிரினங்களும்,
மரங்களும், செடிகளும், அதில் விதவிதமான மலர்கள், காய்கள், கனிகள், உயிரினங்கள், என்று காலகாலமாக பரிணாம வளர்ச்சியில் மாற்றங்கள் ஏற்பட்டு இயற்கை என்று சொன்னாலே மனம் மகிழ்ச்சி அடைய கூடிய வகையில் இயற்கைக்  காட்சிகள் நமது உள்ளத்தை பூரிப்படைய வைத்தது.



     கிராமப் புறங்களில் சுற்றி அலைந்து பாருங்கள், காடுகளுக்குள் அனுமதி பெற்று நுழைந்து பாருங்கள்,  ஏரி, குளம், குட்டைகளில் பறவைகளை கண்டு இரசித்துப் பாருங்கள், எந்த உயிரினங்களையும் தொல்லைப் படுத்தாமல் உற்று கவனித்துப் பாருங்கள், நமது மனநலம் மேம்படுவதுடன், வாழ்க்கை-  இரசனையுடன் அமையும்.பணத்திற்கும், அந்தஸ்துக்கும் அடிமையாகாமல் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ முடியும், சமூகம் மேம்படும். ஆனால் நடைமுறையில் நாம் இயற்கையை விட்டு விலகியதோடு, இயற்கை சம நிலை குலைவதற்கும், அழிவிற்கும் வித்திட்டு விட்டோம். பார்க்கும் இடமெல்லாம் அசுத்தம், குப்பைகள், சாக்கடை நிரம்பி, கழிவுநீர் வெளியேறி சுற்றுசூழல் பாதிக்கபடுவதோடு மற்ற இயற்கை காரணிகள் அழிவதற்கும் நமது வாழ்வியல் காரணமாக அமைந்து விட்டது.

                  மரங்கள் அழிந்து வருவதோடு மற்ற உயிரினங்கள் பேரழிவுக்கு உள்ளாகி வருவதை உணர்ந்து இருக்கிறோமா? வயற்புறம், ஆறு, குளம், கடற்கரை, காடு, என அனைத்தும் சீரழிந்து சின்னா பின்னாமாகிக் கொண்டிருப்பதை நாம் அறிவோமா? பல்லியில் இருந்து பாம்பு வரை, யானையில் இருந்து பூனை வரை அனைத்து வகை உயிரினங்களுக்கும் மனிதனே பெரிய எதிரியாக இருக்கின்றான்.


              இயற்கையோடு ஒன்றி மற்ற உயிரினங்களின் துணையோடு வாழ்ந்த வாழ்க்கை மாறிப்போய் அனைத்தையும் அழித்து, அடிமைப்படுத்தும் வெறியோடு "கொன்றால் பாவம் தின்றால் போகும்" என்ற நிலையில் வேதாந்தம் பேசுகின்றோம். வீட்டிற்கருகில் இரவில் ஆந்தை குரல் எழுப்புவதை அபச குணம் என்கின்றோம், ஆந்தை எலிகளை வேட்டையாடி எலிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தி நமக்கு மறைமுகமாக நன்மை செய்வதை அறியாமல் போனது ஏன்? சாதாரணமாக கிராமப்புறங்களில் இருக்கும் வெண் ஆந்தையை நகர்ப்புறங்களில் பார்த்தால் "அதிசயப்பறவை" என ஆச்சரியப்படுகிறோம்.



    காக்கை, குயில், குருவி, மைனாவை தவிர எந்த பறவையை பார்த்தாலும் வெளிநாட்டு பறவை என கூறுகிறோம். அலங்குவை  (Ant Eater) பார்த்தால் அதிசய விலங்கு, காடுகள் என்றாலே சிங்கம் வாழும், அது காட்டு ராஜாவாக இருக்கும் என நம்புவதும், நம் படித்த, படிக்காத, பாமர மக்களுக்கு ஏன் தெரியவில்லை? இயற்கையை பற்றிய நுண்ணுணர்வு அற்றவர்களாகவும், இயற்கையை புரியாதவர்களாகவும் நம் சமூகம் மாற்றப்பட்டது தான் காரணம்.

    நமது இயற்கை பிணைப்பை, தொடர்பை மீட்டெடுக்க வேண்டும். இயற்கை சார்ந்த அறிவொளி மரபு உண்டாக்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் பொதுவான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 'நீரின்றி அமையாது உலகு'
என்று அறிந்திருப்போம் ஆனால் நீர் ஆதாரங்ககளை காப்பாற்ற, பாதுகாக்க தவறுவோம், நீரை அசுத்தப்படுத்துவோம், விரையமாக்குவோம், நீர் இல்லை என்றால் சாலை மறியல் செய்வோம். ஆகவே அனைத்து மக்களுக்கும் இயற்கைப் பற்றி அறிவியல் ரீதியாக விளங்க வைக்க வேண்டும். அனைவரும் இயற்கையை புரிந்து, அறிந்து கொள்ள முயற்சிப்போம், இயற்கையை பாதுகாக்க முயற்சி செய்வோம் என மார்ச் 21 உலக வன தினத்து அன்று உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.


      

No comments

Welcomes you to Nature for Future - A.M.AMSA

Powered by Blogger.