வனவலம் (Trekking) - நூல்விமர்சனம்



வனவலம் (Trekking) என்ற நூல் 'சின்ன சாத்தன்' என்கிற இயற்கை ஆர்வலரால் -'தொலைகாட்சிப் பெட்டி முன் அமர்ந்து பொழுதைக் கொல்லுவதை விட இயற்கையை நோக்கி அதை அனுபவித்து, அதைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் சமுதாயத்திற்கு சில பயன்களையும் விளைவிக்கலாம்' என்ற நோக்கத்தோடு எழுதப்பட்டது.

இந்நூல் மேற்சொன்ன இயற்கை பாதுகாப்பு என்கிற விழிப்புணர்வை ஊட்டுகிறதா? சமுதாயத்திற்கு சில பயன் உள்ள தகவல்களை உள்ளடக்கி இருக்கின்றதா? என்ற கேள்விக்கு இந்நூலை வாசித்தவுடன் பெரும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அது மட்டுமில்லாமல் பல செய்திகள் நம்மை வருத்தம் அடைய செய்கின்றது.நமது நாட்டில் இயற்கையளர்கள் ஒரு புறம் தமது பணிகளை செய்து கொண்டிருந்தாலும், மறுபுறம் இது போன்ற நூலாசிரியர்கள் ஆர்வத்தினால் அதன் 'நுண்மான் நுழைபுலம்' அறியாமல் -தனக்கு தெரிந்தது சரியா? தவறா? என்று கூட கணிக்காமல், ஆழ்ந்து கற்று உணராமல், புகழுக்காக தவறான கருத்துக்களை பதிவு செய்வது, அனுபவம் மிக்க இயற்கை அறிஞர் களுக்கு வருத்தத்தையும், வேதனையும் உண்டாக்குவது மட்டும்மல்லாமல் -இயற்கை பற்றிய சரியான செய்திகளை பொது மக்களுக்கு கொண்டு செல்வதில் இடையூறாகவும், தடையாகவும் அமைந்து விடுகிறது.


         
                   உதாரணமாக இந்நூலில் 45 ஆம் பக்கத்தில் 'லாங் வுட் சோலை உலா' என்ற தலைப்பில் உள்ள அத்தியாயத்தில், "காகங்கள் நகரத்திற்குள் இருப்பது அல்லாமல்,
சோலைக்குள்ளும் வரும், பிற பறவைகளின் முட்டைகளைக் கூட தின்றுவிடும்.மற்ற பறவைகளுக்கு தொந்தரவு, ஒரு காகத்தை (இறந்தது) கட்டி வைத்துப் பார்த்தால் மிரண்டு ஓடும் என நினைத்து விட்டதில் ஏமாற்றம். குழுவாகக் காகங்கள் திரண்டு 'கண்டோலேன்ஸ்' கொண்டாடின என கோத்தகிரி ராஜு சொன்னார்".
                 சோலைக்குள் மனிதர்கள் செல்லாமல் இருப்பதே, சோலைப் பாதுகாப்பில், அதன் உயிரின சூழலுக்கு பாதுகாப்பாக இருக்கும். ஆனால் அச்சோலை பாதுக்காப்பு கமிட்டியின் தலைவர் இறந்து போன காகத்தை கட்டி வைத்து காகங்களை துரத்தும் 'பஞ்ச தந்திர ' உத்தியை கையாளும் விதத்தை, ராஜு உண்மையிலே அருமையான பர்சனாலிட்டி என நூலாசிரியர் பாராட்டுகிறார் என்றால் நூலாசிரியரின் தரமும், அவருடைய எழுத்தின் தரமும் படிகின்ற வாசகர்களுக்கு எளிதில் புரியும்.
       
                   இயற்கை  வரலாற்றையும், அதன் பரிணாமத்தையும் அறிவியல் என்ன கூறுகிறது என்பதை அறியாமல் ஏதோ ஒரு சார்புடன் இயற்கையை நோக்கும் இந்நூலசிரியருக்கு அது அண்டங் காக்கையா? (Jungle Crow)  வீட்டு காக்கையா? (House Crow) என்பது கூட தெரியாமல் -'காகங்கள் மற்ற பறவைகளுக்கு தொந்தரவு,காகங்கள் கண்டோலேன்ஸ் கொண்டாடின' என சின்ன சாத்தன் சிலாகிக்கிறார். இயற்கை குறித்த அவர் அறிவைக் கண்டு இயற்கை ஆர்வலர்கள் வருத்தப்படவே செய்கின்றனர். அடுத்ததாக "அட்டை இருக்குமா" என வினவ ஜூனுக்கு (June) பிறகு அட்டையிருக்கும் என ராஜு சொல்ல, "அப்படியிருக்கும் போது எப்படிதான் சோலைக்குள் உலாவுவதோ" என இவர் கவலையுடன் கேட்பது முறையா?

                  இதைப் படிக்கும் பொழுது இயல்பாகவே நமக்கு குழப்பம் வருகிறது. சோலைக்குள் அட்டை இருக்க வேண்டுமா? இருக்க வேண்டாமா? என்பதே புரியவில்லை. அது போகட்டும் அட்டை இருந்தால் என்ன ஆகிவிடும்? அட்டை வாழும் பகுதிக்குள் நீங்கள் எதற்காக உலா போக வேண்டும்? வனவலத்தைப் பற்றி நூல் எழுதும் அளவுக்கு வனவலம் வந்தவர், வனத்தைப் பற்றி தெரிந்தவர் அல்லர். எங்கெங்கு எது, எது வாழும் என்பதைக் கூட புரிந்து கொள்ளவில்லை. அட்டையின் வாழ்வியல் இயற்கையின் ஓர் அங்கம் -என்ற சாதாரண சங்கதி கூட தெரியாமல் -அட்டை இருந்தால் எப்படி தான் சோலைக்குள் உலாவுவதோ என வருந்தியிருக்கிறார் என்றால் 'வனவலம்' தகுதியற்ற நூலாகத்தான் படுகின்றது.

              இயற்கை ஆர்வத்திற்கு பொருத்தமற்ற நூல் என்பதற்கு மற்றொரு உதாரணம் 63 ஆம் பக்கத்தில் 'ஒரு ஆர்வமான சம்பவம்' என்ற தலைப்பில், "நானும், நண்பர் ஜோதிமணியும் புளிய மரத்தடியில் ஆன்மீகத்தில் மூழ்கியிருந்தோம். அப்போது கோல்ட் பிளேக்,ஹனி டியூ (Gold Flake, Honey Dew) சிகரெட் பாக்கெட் புளிய மரத்துக்கடியில் கிடந்தது. அதை சுற்றியும், அதன் மேலும் கட்டெறும்புகள் மொய்த்தன, ஏன்? சிகரெட்டில் சின்தடிக் தேன் சொட்டுக்கள் சேர்ந்து இருப்பதால் அந்த வாசனைக்கு நிறைய எறும்புகள் மொய்த்து ஏமாற்றமடைந்தன. நாங்கள் மரத்தடியில் நிற்க, ஏமாந்த எரிச்சலில்,எறும்புகள் எங்களையும் கடித்தன.அடுத்த நூற்றாண்டில் எறும்புகள் சின்தடிக் தேன் வாசனைக்கு ஏமாறாத மாதிரி இறைவனால் படைக்கப்படும்".என்கிறார்.

            சின்தடிக் தேன் சொட்டுக்களுக்காக எறும்புகள் மொய்த்து ஏமாந்தன எனக் கூறும் சின்ன சாத்தன் எறும்பைப் பற்றி ஆய்வு செய்தவரா என்ன? வாசகர்களை முட்டாள்களாக நினைத்து எறும்புகளையும் முட்டாள்களாக்கி தன்னுடைய இரசனையை வெளியிட்டு இருக்கிறார். தெளிவற்ற, தேவையற்ற, நாகரிகமற்ற நடையின் போக்கு, துணுக்கு குறுக்கீடு என்பதோடு பதிப்புத் தரமற்ற 236 பக்கங்கள் கொண்ட இந்நூல் மிகைப்படுத்தல்,பொருந்தாத கற்பனைகள், கனவுகள், கதைகள் என மொத்தத்தில் இயற்கை என்ற கருவில் செயற்கையாக, ஊனமுற்ற நூலாக காட்சியளிக்கிறது.   

காட்டுயிர் இதழில் வந்த கட்டுரை
Powered by Blogger.